திருப்பியடிக்கும் உக்ரைன்: நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் பலி?

இறுதி கட்டத்தை நெருங்குகிறதா உக்ரைன் போர்?
திருப்பியடிக்கும் உக்ரைன்: நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் பலி?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலாக தொடங்கிய போர் நடவடிக்கையின் ஓராண்டை நெருங்கும் நிலையில், உக்ரைன் தீவிரமாக திருப்பியடிக்கத் தொடங்கியுள்ளது. மேற்கு நாடுகளின் நவீன ஆயுத தளவாடங்கள் உதவியால் உக்ரைன் முன்னெடுத்த தற்போதைய தாக்குதலில் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

2022, பிப்.24 அன்று உக்ரைன் மீதான அதிகாரபூர்வ தாக்குதலை ரஷ்யா அறிவித்தது. இன்னும் 50 தினங்களில், அதன் ஓராண்டு நிறைவடைய இருக்கும் சூழலில் இருதரப்பிலும் போர் தாக்குதல்கள் உக்கிரம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக தடுப்பாட்டமாகவே உக்ரைனின் நடவடிக்கைகள் இருந்து வந்தன. சர்வதேச சமூகத்தின் கண்டனங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கோடு ரஷ்யாவும், உக்ரைனின் படைத்தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதலை தொடங்கியது.

பெரியளவில் ராணுவக் கட்டமைப்போ, ஆயுத தளவாடங்களோ இல்லாத உக்ரைன் எளிதில் விழுந்துவிடும் என்றே ரஷ்யா கணித்திருந்தது. ஆனால் போர் தொடங்கி 11 மாதங்களாகும் சூழலில், உக்ரைன் பின்வாங்காததோடு திருப்பியடிக்கும் வேகத்தையும் அதிகரித்துள்ளது. உக்ரைனின் போர் வேகத்தின் பின்னே மேற்கு நாடுகளின் ஆதரவு நீடிப்பதே இதற்கு காரணம்.

உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஹிமார்ஸ்
உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஹிமார்ஸ்

சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த உக்ரைன் தேசம், நேட்டோ கூட்டமைப்பில் சேர விரும்பியதற்கு ஆரம்பம் முதலே ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. நேட்டோ அங்கத்தினராக உக்ரைன் மாறுவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் என ரஷ்யா கருதியதே இதற்கு காரணம். இந்த அடிப்படையில் உக்ரைன் மீதான தாக்குதலையும் ரஷ்யா தொடங்கியது. ரஷ்யாவின் இந்த போக்கை மேற்கு நாடுகள் கண்டித்தபோதும், அவை உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவை எதிர்த்து போர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அந்த முயற்சி உலகப்போருக்கு வித்திடும் என்பதால் நேட்டோவை உள்ளடக்கிய மேற்கு நாடுகள் அமைதி காத்தன.

ஆனால் உக்ரைனுக்கான ஆயுத தளவாடங்கள், போர்ப்பயிற்சி, ரஷ்ய துருப்புகள் குறித்த உளவுத் தகவல்கள் உட்பட மறைமுக சாத்தியங்கள் அனைத்திலும் மேற்கு நாடுகள் துணை நின்றன. குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிரான தனது கணக்கைத் தீர்க்கும் வகையில் அமெரிக்கா சகல வழிகளிலும் உக்ரைனுக்கு வாரி வழங்கியது. அவ்வகையிலான நவீன போர்த்தளவாடங்களே தற்போது உக்ரைனில் போர் உக்கிரம் அடைந்திருப்பதற்கும், அது நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்படுவதற்கும் காரணமானதாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் மீதான அதிகாரபூர்வமான தாக்குதலை ஆரம்பித்த வேகத்தில், தெற்கு உக்ரைனின் கெர்சான், டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டு வந்தது. அவை ரஷ்யாவுடன் இணைக்கப்படுவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேற்கு நாடுகளின் ஆயுத தளவாடங்கள் அளித்த தெம்பில் திருப்பியடித்து வரும் உக்ரைன், கெர்சான் உள்ளிட்ட பகுதிகளில் சிலவற்றை மீட்டு வருகிறது.

அமெரிக்காவின் அண்மை கொடையான ஹிமார்ஸ் ஏவுதளவாடங்கள் உக்ரைனுக்கு புதிய வேகம் தந்துள்ளன. டொனட்ஸ்க் பிராந்தியத்தின் மகீவ்கா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தங்கியிருந்த கட்டிடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ஹிமார்ஸ் ஏவுதளவாடத்திலிருந்து பாய்ந்த 4 ஏவுகணைகள் நேரடியாக தாக்கியதில் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. ரஷ்ய தரப்பில் வெளியான தகவலில் 63 என்றும், உக்ரைன் தரப்பில் சுமார் 400 என்றும், கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஷ்யாவுக்கு ஈரானின் ட்ரோன்
ரஷ்யாவுக்கு ஈரானின் ட்ரோன்

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு புத்தாண்டு மோசமாக தொடங்கியிருப்பதாக தெரிந்தாலும், தற்போதைய பின்னடைவு என்பதையும் தனது போர் வியூகங்களில் ஒன்றாகவே மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உக்ரைனின் பொதுமக்கள் மீதான தாக்குதலை தவிர்த்து வந்த ரஷ்ய படைகள், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும் குண்டுகளை வீசத் தொடங்கியுள்ளது. மேலும் பொதுமக்களின் அத்தியாவசியங்களான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்துக்கான அமைப்புகளையும் அழித்து வருகிறது. இவை உக்ரைன் மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் அச்சம் மற்றும் அழுத்ததை ஏற்படுத்தி வருகின்றன. இனி ரஷ்ய தரப்பிலான அந்த தாக்குதல்கள் வேகமெடுக்கும்.

ஈரானிலிருந்து பெறப்பட்ட ட்ரோன்கள் வாயிலாகவும், ரேடார்களின் பார்வையில் பிடிபடாத வகையில் தாழச் செல்லும் ஏவுகணைகளையும் உள்ளடக்கிய தாக்குதல் வியூகத்துக்கு ரஷ்யா மாறி வருகிறது. தற்போது ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதற்கான பதிலடி நடவடிக்கை என்ற பெயரில் இந்த ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா பெரும் தாக்குதலை நடத்தும். இவை உக்ரைனின் மனித பலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் போர் நடவடிக்கைகளை ஆராயும் சர்வதேச பார்வையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in