அடுத்து சூரியனையும் தொடுவோம்... பிரதமர் மோடி நம்பிக்கை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
2 min read

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், இந்தியாவின் அடுத்த இலக்கு சூரியன்தான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் கால் பதிக்கப் போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி, அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ. இந்த திட்டம் பாதி தோல்வியடைந்த நிலையில், சந்திரயான் 3 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டது.

சந்திரயான் 3 விஞ்ஞானிகள், பிரதமர் மோடி
சந்திரயான் 3 விஞ்ஞானிகள், பிரதமர் மோடி

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்ட பாதையில் பயணித்தது. பின்னர் கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு, லேண்டர் மட்டும் நிலவுக்கு நெருக்கமாக சுற்றிவர தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் நிலவின் தென் துருவத்தில் எந்த நாடும் ரோவரை இறக்கியதில்லை. அந்த வகையில் இந்தியா உலக சாதனையை படைத்திருக்கிறது. இந்த தருணத்தை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் இந்தியாவின் அடுத்த இலக்கு சூரியன்தான் என்றும் கூறியுள்ளார்.

சந்திரயான் 3
சந்திரயான் 3

சூரியனை ஆராய இஸ்ரோ விரைவில் ஆதித்யா L1 எனும் புதிய விண்கலத்தை அனுப்ப இருக்கிறது. சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும். இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது.

இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான். சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 10.5 லட்சம் கி.மீ தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் பணி. பெங்களூரு யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷார் விண்வெளி நிலையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. சூரியன் குறித்த ஆய்வையும் ஒரு சில உலக நாடுகள்தான் மேற்கொண்டு வருகின்றன. இனி எதிர்காலமே சூரிய ஒளியாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில் இஸ்ரோவின் இந்த ஆதித்யா L1 விண்கலம் குறித்த எதிர்பார்ப்பு தீவிரமடைந்து வருகிறது. தற்போது சந்திரயான் 3 திட்டம் வெற்றிப்பெற்று நிலையில் ஆதித்யா எல் 1 திட்டமும் வெற்றி பெறும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in