
பிப்ரவரி மாதத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்று பிரபல டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் மீண்டும் கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 6-ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் யாராலும் மறக்க முடியாத துயரமாகிவிட்டது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கிருந்த கட்டிடங்களை தரைமட்டமாக்கிவிட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இடிபாடுகளில் இருந்து சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் துருக்கி, சிரியாவுக்கு உதவிகளை செய்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்களிப்பை பார்த்து துருக்கி அதிபர் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கடந்த 3-ம் தேதி கணித்திருக்கிறார் பிரபல டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் (frank hoogerbeets). இவர் கணித்தபடி இந்த நாடுகளில் நிலநடுக்கத்தால் பயங்கரமான சேதம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ். அது என்னவென்றால், இந்த மாதத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்று அவர் கணித்திருக்கிறார். இதனால் இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் இடையே தற்போது அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலநடுக்கம் எந்த நகரத்தில் ஏற்படும் என்று அவர் கணிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த 4 நாடுகளில் ஏற்படும் என்று கணித்திருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த காலங்களைப் போன்று அலட்சியமாக இருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.