போதையில் மகளை அடித்ததால் ஆத்திரம்: திருமணமான 5 நாளில் மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார்!

முத்தரசன்
முத்தரசன்

காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தனது தங்கையையும், அவரது கணவரையும் அண்ணன்காரர் வெட்டிக் கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், திருமணம் நடந்து ஐந்து நாட்கள் கூட ஆகாத நிலையில் தனது சொந்த மருமகனை வெட்டிக் கொலை செய்திருக்கிறார் அவரது மாமனார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சிங்களாந்தி மங்களநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசன் மகன் முத்தரசன்(27) இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ரவிச்சந்திரன் என்பவரின் மகள் அரவிந்தியா (22) என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 13- ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் மகள் மற்றும் மருமகனை ரவிச்சந்திரன் நேற்று- மறுவீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். அப்போது முத்தரசன் மதுபோதையில் தனது மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்திருக்கிறார்.

திருமணமான 5 நாட்களிலேயே மகளுடன் சண்டை போடும் மருமகனைக் கண்ட ரவிச்சந்திரன் அதிர்ந்து போய் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால் குடிபோதையில் இருந்த முத்தரசன் அதனைக் கேட்கும் நிலையில் இல்லை. சமாதானப்படுத்திய மாமனாருடன் சண்டைக்கு சென்றார். இதன் காரணமாக மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மாமனார் என்றும் பாராமல் ரவிச்சந்திரனை முத்தரசன் தாக்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மகளுடன் சண்டை போடுவதால் கோபம் அடைந்திருந்த ரவிச்சந்திரன், தற்போது தன்னிடமும் சண்டைக்கு வந்து தன்னையும் மருமகன் அடித்தும் விட்டதால் கடுமையாக ஆத்திரம் அடைந்தார். அதன் விளைவாக அருகில் இருந்த அரிவாளை எடுத்து முத்தரசனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முத்தரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து நேராக திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் சென்ற ரவிச்சந்திரன் தன் மருமகனை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்தரசனை கொலைசெய்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தரசன் அரவிந்தியாவை காதலிக்கும்போதே அவருடன் சண்டையிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படி ஒருமுறை இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அரவிந்தியாவை முத்தரசு கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்த வழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தநிலையில் முத்தரசனின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டலால்தான் தற்போது முத்தரசன் அரவிந்தியாவின் திருமணம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in