காதலுக்கு கடும் எதிர்ப்பு... காதலனை கரம் பிடித்த காதலி: புதுமணத் தம்பதியை கொடூரமாக கொன்ற தந்தை

ரேஷ்மா, மாணிக்கராஜ்
ரேஷ்மா, மாணிக்கராஜ்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த தந்தை, வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்த தன் மகள், மருமகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரப்பட்டி கிராமம், ஆர்.சி தெரு, சேவியர் காலணியைச் சேர்ந்தவர் முத்துகுட்டி(50) விவசாயி. இவர் வேன், மினி லாரி ஆகியவைகளையும் சொந்தமாக வைத்துள்ளார். இதை வாடகைக்கு விட்டும் வருவாய் ஈட்டி வருகிறார். இவரது மகள் ரேஷ்மா (20) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு பயின்றுவந்தார்.

முத்துக்குட்டியின் வீட்டிற்கு நேர் எதிரிலேயே வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான மாணிக்கராஜூம், ரேஷ்மாவும் உறவினர்கள். எதிர், எதிர் வீட்டில் இருந்த இவர்கள் முதலில் நட்பாகப் பழகினர். ஒருகட்டத்தில் இது காதலாக மாறியது. ரேஷ்மாவின் காதல் விவகாரம், முத்துகுட்டிக்கு தெரியவரவே, வேறொரு வரன் பேசி திருமணத்திற்கும் நாள் குறித்தார். இதனால் தன் காதலன் மாணிக்கராஜோடு, ரேஷ்மா கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.

இங்கிருந்து மதுரைக்கு சென்று உறவினர் வீடு ஒன்றில் தஞ்சம்புகுந்த இந்தக் காதல்ஜோடி அங்கேயே திருமணமும் செய்துகொண்டனர். சிலநாள்கள் அங்கே இருந்துவிட்டு தன் குடும்பத்தினர் எப்படியும் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் நம்பிக்கையோடு வீரப்பட்டி கிராமத்திற்கே வந்தனர். புதுமணத் தம்பதிகள் மாணிக்கராஜூன் வீட்டிலேயே வசித்து வந்தனர். நேற்று மாணிக்கராஜூன் தாய் மகாலெட்சுமி நூறுநாள் வேலைக்குச் சென்றிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது புதுமணத் தம்பதிகள் ரேஷ்மா மற்றும் மாணிக்கராஜ் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

தன் மகள் காதல் திருமணம் செய்தது பிடிக்காத கோபத்தில் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி இந்த கொலைகளைச் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். தப்பியோடிய முத்துக்குட்டியைப் பிடிக்க எட்டயபுரம் போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். திருமணம் முடிந்த 26 நாளில் தன் மகள், மருமகனை முத்துக்குட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in