
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு குழந்தைகளையும் அடுத்தடுத்து பறிகொடுத்த பெற்றோர்களின் கதறல் காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது. அரசு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை, அவர் நடத்திவரும் மருத்துவமனையிலேயே வாங்கி கொடுத்தும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
திருப்பத்தூர் அடுத்த செலந்தம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அருண்(28). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இவருக்கும் புவனேஸ்வரிக்கும் திருமணமானது. நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரிக்கு கடந்த 8-ம் தேதி ஒரே பிரசவத்தில் இரண்டு பெண்குழந்தைகள் பிறந்துள்ளன.
குழந்தைகளின் எடை குறைவாக இருந்த காரணத்தால், அப்போதிலிருந்து அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அடுத்த குழந்தையும் உடல் நலக்குறைவாக இருந்ததால், தான் நடத்திவரும் மருத்துவமனையிலிருந்து ஒரு சில மருந்துகளை வாங்கி வரவேண்டும் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மூன்று நாட்கள் கழிந்த நிலையில் ஒரு பெண் குழந்தை இறந்துவிட்டது.
மீதமிருக்கும் ஒரு பெண் குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி மருத்துவர் குறிப்பிட்ட மருந்துகளை அருண் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் மாலையில் குழந்தை திடீரென இறந்து விட்டதாக மருத்துவர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து குழந்தைகளைப் பறிகொடுத்த அருண் கூறுகையில், "30 ஆயிரம் ரூபாய் அளவிலான மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுத்தும் என் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. அதற்கு நான் தனியார் மருத்துவமனையிலேயே சேர்த்திருப்பேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது" என அவர் கூறினார்.