
நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று ஒரு எளிமையான விழாவில் பதவியேற்றார். பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு 41வது பிரதமராக ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் கட்சியையும் நாட்டையும் வழிநடத்த முன்னாள் காவல்துறை அமைச்சர் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 42 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் சிண்டி கிரோ, ஆர்டெர்னின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிறகு, சக அமைச்சர்கள் முன்னிலையில் எளிமையான பதவியேற்பு விழாவை நடத்தினார். இதற்கிடையில், கார்மெல் செபுலோனியும் துணைப் பிரதமராகப் பதவியேற்றார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அடிப்படையான அணுகுமுறையாக இருக்கும் என 44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ் உறுதியளித்துள்ளார். நியூசிலாந்து பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால் சவாலான நேரத்தில் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். "இது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு ஆகும். எதிர்வரும் சவால்களால் நான் உற்சாகமாக இருக்கிறேன்" என்று கூறினார். ஆனாலும் அவர் முன்னாள் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
முன்னாள் பிரதமர் ஆர்டெர்ன் இன்று வெளியேறியபோது நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற மைதானத்தில் கூடி, கட்டிப்பிடித்து வாழ்த்தி வழியனுப்பினார். இதில் பலர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். அதன்பின்னர் ஆர்டெர்ன் அரசு இல்லத்திற்குச் சென்றார், அங்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை நியூசிலாந்தில் உள்ள கிங் சார்லஸின் பிரதிநிதி கவர்னர் ஜெனரல் சிண்டி கிரோவிடம் வழங்கினார்.