
உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. அதேநேரத்தில் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரை, சுற்றுலாத்தலங்களிலும் கூட்டம் களைகட்டியுள்ளது. அதேநேரம் புத்தாண்டு கொண்டாட்டம் என்னும் பெயரில் விதிகளை மீறியோரும் பெருகிய வண்ணமே உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே இரவில் 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் கூறுகையில், “புத்தாண்டை முன்னிட்டு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்தை முன்னிறுத்தி காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அதிவேகமாக வந்து மற்றவர்க்கு விபத்து ஏற்படுத்துதல், உரிய ஆவணங்கள், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் சென்னை போக்குவரத்து காவல் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆபத்தான முறையில் வீலிங் செய்து வாகனம் ஓட்டிய 22 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஒரேபைக்கில் மூன்றுபேர் பயணம் செய்த குற்றத்திற்காக சென்னையில் நேற்று இரவு மட்டும் 65 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் மின்கம்பத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிர் இழந்தார் ”என்றனர்.