புத்தாண்டு முதல் புதிய தடுப்பூசி!

கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான ‘போர்’
புத்தாண்டு முதல் புதிய தடுப்பூசி!

கரோனா தடுப்பூசிகளின் படலத்துக்கு அடுத்தபடியா கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான புதிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் புத்தாண்டு முதல் தொடங்குகிறது.

கருப்பைவாய் புற்றுநோய் பீடித்து இறக்கும் 3 பெண்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். எனவே கடந்த பத்தாண்டுகளாகவே கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி விழிப்புணர்வை அரசு பரவலாக்கி வருகிறது. விழிப்புணர்வு குறைவு என்பதாலும், தடுப்பூசியின் விலை காரணமாகவும், சாமானிய மக்களை தடுப்பூசிகள் முறையாக சென்றடையவில்லை. விபரமறிந்தோரும் தடுப்பூசி தொடர்பான உறுதிபடுத்தப்படாத பக்கவிளைவுகள் குறித்த பீதியால் தடுப்பூசிகளை பெறாது இருந்தனர்.

இந்த தடுமாற்றங்களுக்கு முடிவுகட்டும் வகையில் அரசே முழுமூச்சாக கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான இயக்கத்தை தொடங்குகிறது. இதன்படி கரோனாவுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்த சீரம் நிறுவனம், கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. ’செர்வாவேக்’ என்ற பெயரிலான அந்த தடுப்பூசிக்கு அண்மையில் மத்திய அரசு அனுமதியும் வழங்கியது. தொடர்ந்து தேசிய தடுப்பூசி திட்டத்தில் ’செர்வாவேக்’ இணையவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிக்கான ஏற்பாடுகள் புத்தாண்டில் தொடங்குகின்றன. இந்த தடுப்பூசியின் உத்தேச விலை ரூ.300 என நிர்ணயிக்கப்பட உள்ளது. சர்வதேசளவில் இந்த தடுப்பூசியின் விலை இதைவிட 10 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 14 முதல் 19 வயதிலான பதின்ம வயது பெண்களுக்கு புதிய கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in