`தயாரிப்பு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்'- ஷவர்மா விற்பனைக்கு கேரள அரசு கிடுக்கிப்பிடி

ஷவர்மா சாப்பிட்டு பலியான மாணவி
ஷவர்மா சாப்பிட்டு பலியான மாணவி

கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தேவானந்தா என்னும் 16 வயது மாணவி மூன்று மாதங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். கேரளத்தின் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஷவர்மா சாப்பிட்ட 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் குடல் தொற்றுநோயை உருவாக்கும் ஷிகெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுப் பணிகளில் தீவிரம் காட்டிவந்தது. இந்நிலையில் கேரள அரசு, ஷவர்மா விற்பனைக்கு புதிய சில கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளது.

அதன்படி, “ஷவர்மா தயாரிப்பு தேதி, நேரம் அதன் மேல் சுற்றப்பட்டிருக்கும் தாளில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஷவர்மாவோடு கொடுக்கப்படும் மைனஸை இருநாள்களுக்கு மேல் வைத்திருந்து பயன்படுத்தக் கூடாது. ஷவர்மாவை ஒரு மணிநேரத்திற்கு மேல் திறந்தவெளிப்பகுதியில் வைத்து பயன்படுத்தக் கூடாது. ஷவர்மாவுக்கான பொருட்கள் இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயத்தின் சான்று அளிக்கப்பட்ட பொருள்களாக இருக்கவேண்டும். ஷவர்மாவில் பயன்படுத்தப்படும் கோழிக்கறியை 15 நிமிடங்களும், மாட்டு இறைச்சியை 30 நிமிடங்களும் சமைக்க வேண்டும். இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கேரளத்தில் முறையான உரிமம் இன்றி இயங்கிய 214 ஷவர்மா கடைகளும், சுகாதாரமற்ற முறையில் ஷவர்மா தயாரித்த 165 கடைகளும் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in