விருந்துக்குச் சென்ற புதுமண தம்பதியினர்: ஆற்றில் குளித்தபோது நடந்த விபரீதம்

விருந்துக்குச் சென்ற புதுமண தம்பதியினர்: ஆற்றில் குளித்தபோது நடந்த விபரீதம்

போடியில் திருமண விருந்திற்காகச் சென்றிருந்த தம்பதியினர் ஆற்றில் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தனர். அவர்களுடன் விருந்துக்கு அழைத்த உறவினரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் சஞ்சய்(24), இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக இவரது தாய் மாமனான ராஜா என்பவருக்கும் கோவையைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது சஞ்சய் லண்டனில் இருந்துள்ளார். இதனால் அவரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் லண்டனிலிருந்து திரும்பிய சஞ்சய் அவர்களை போடியில் உள்ள தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.

காலையில் வீட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள உள்ள பெரியாற்றுக் கோம்பை ஆற்றில் குளிப்பதற்காகப் புதுமணத் தம்பதியினர் திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக சஞ்சய் தனது சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனுடன் புதுமணத் தம்பதியினரை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆற்றில் உள்ள பதினெட்டாம்படி கேணியில் குளிப்பதற்காக அப்பகுதிக்குச் சென்ற போது, பாறையில் வழுக்கி நால்வரும் ஆற்றில் விழுந்துள்ளனர். இதில் நால்வரும் பலத்த காயம் ஏற்பட்டு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது சிறுவன் பிரணவ் மட்டும் தப்பித்துக் கரையேறி உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் உடல்களை மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். திருமணமான ஒரே மாதத்தில் புதுமணத் தம்பதியினர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in