அசாமில் அனைத்து மதரஸாக்களையும் மூடுவோம்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அதிரடி

ஹிமந்த பிஸ்வா சர்மா
ஹிமந்த பிஸ்வா சர்மாஅசாமில் அனைத்து மதரஸாக்களையும் மூடுவோம்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அதிரடி

அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களையும் மூட திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது அரசாங்கம் ஏற்கனவே 600 மதரஸாக்களை மூடிவிட்டதாகவும் மற்ற அனைத்தையும் விரைவில் மூடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், எங்களுக்கு மதரஸாக்கள் தேவையில்லை, பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்தான் தேவை என்றும் கூறினார்.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “புதிய இந்தியாவிற்கு மதரஸாக்களுக்கு பதிலாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்தான் தேவை” என்று கூறினார்.

கடந்த காலங்களில், ஹிமந்த பிஸ்வா சர்மா மதரஸாக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், இந்த நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வியை ஆராய வேண்டும் என்று பலமுறை தெரிவித்துள்ளார். அசாமில் தற்போது 3,000 பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மதரஸாக்கள் உள்ளன.

2020ல், அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களையும் வழக்கமான பள்ளிகளாக மாற்றும் சட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அவர், “மதரஸாக்களில் நல்ல சூழலை உருவாக்க வேண்டும். மதரஸாக்களில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களாக கற்பிக்கப்படும். கல்வி உரிமை மதிக்கப்படும், ஆசிரியர்களின் தரவுத்தளம் பராமரிக்கப்படும்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in