இல.கணேசன் பொறுப்பிலிருந்த மேற்கு வங்க ஆளுநர் பதவிக்கு புதியவர் நியமனம்

இல.கணேசன் பொறுப்பிலிருந்த மேற்கு வங்க ஆளுநர் பதவிக்கு புதியவர் நியமனம்

மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். தற்போது மேற்கு வங்கத்துக்கு என தனியாக ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றிய ஜக்தீப் தன்கர், குடியரசு துணைத்தலைவராக டெல்லி சென்றதில் அந்த இடம் காலியானது. புதிய ஆளுநர் அறிவிப்பாகும் வரை கூடுதல் பொறுப்பாக இல.கணேசன் அப்பதவியில் வகித்தார். இந்நிலையில் சி.வி.ஆனந்த போஸ் என்பவர் மேற்கு வங்க மாநிலத்துக்கான ஆளுநராக குடியரசுத் தலைவர் மாளிகையால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இல.கணேசன் மேற்கு வங்க பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

சி.வி.ஆனந்த போஸ் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பல்கலைக்கழக துணைவேந்தர், மாவட்ட கலெக்டர், முதன்மைச் செயலர், தலைமைச் செயலர், ஆளுநருக்கான சிறப்பு ஆலோசகர் என பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். மேலும் ஐநா-விலும் பல்வேறு பொறுப்புகளை ஆனந்த போஸ் வகித்துள்ளார். சுமார் 40 புத்தகங்களின் ஆசிரியர், 32 விருதுகளை பெற்றவர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளார் என இவரது பெயரிலான ட்விட்டர் பக்கம் விவரிக்கிறது.

மேற்கு வங்கத்தின் முந்தைய ஆளுநர் ஜக்தீப் தன்கருடன் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் எதிர்கொண்ட சச்சரவுகள் நாடறிந்தது. நிர்வாகத் திறனில் நெடிய அனுபவம் பெற்ற ஆனந்த போஸ், ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கில் சதா சர்ச்சைக்கு ஆளாகும் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in