
’பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலையல்ல.. கொலை’ என்று, அவரது சடலத்தை போஸ்ட்மார்டம் செய்த குழுவை சேர்ந்தவர் புதிய குண்டு வீசியிருக்கிறார்.
பாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகையான துனிஷா சர்மா என்பவர் 2 தினங்கள் முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். படப்பிடிப்பு தளத்திலேயே அவர் தற்கொலைக்கு ஆளானது, 2 வருடங்களுக்கு முந்தைய சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற வளரும் இந்தி நடிகரின் தற்கொலையுடன் ஒப்பிட்டு பேசு பொருளாயிருக்கிறது.
2020, ஜூனில் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் சடலம், மும்பையில் இருக்கும் ஆர்.என்.கூப்பர் முனிசிபாலிடி மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது. அந்த போஸ்ட்மார்டம் குழுவில் பங்கேற்றவர்களில் ஒருவரான ரூப்குமார் ஷா என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ’டிவி 9’ என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரூப்குமார் ஷா கூடுதல் விபரங்களை வழங்கியுள்ளார்.
”அன்றைய தினம் 6 சடலங்களை போஸ்ட்மார்டம் செய்தோம். அவர்களில் சுஷாந்த் சிங் மட்டுமே விஐபி. தற்கொலை செய்துகொண்டதாக கொண்டுவரப்பட்ட அவரது உடலில் சந்தேகத்துக்கு இடமான அடையாளங்கள் கணிசமான எண்ணிக்கையிலும், கழுத்தில் 3 அடையாளங்களும் தென்பட்டன. எனவே இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என உயரதிகாரிகளிடம் தெரிவித்தோம். மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கவும் கேட்டுக்கொண்டோம். ஆனால் நாங்கள் சொன்னதை காதிக் போட்டுக்கொள்ளாத உயரதிகாரிகள் ஒரு சில படங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு, இரவு நேர போஸ்ட்மார்டத்தை பெயரளவில் இடம்பெறச் செய்தனர்” என்று ரூப்குமார் ஷா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள், சுஷாந்த் சிங்கின் வாய்ப்புகளை தட்டிப்பறித்ததாகவும், அவருக்கு கடும் மன உளைச்சல் தந்ததாகவும் அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் காரணமாக அவர் போதை பழக்கத்தில் ஆழ்ந்ததில், சுஷாந்துக்கு போதை பொருட்கள் வழங்கப்பட்டதன் பின்னணியில் அப்போதைய காதலி ரியா சக்கரவர்த்தி முதல் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே வரை குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். சந்தேகத்துக்கு இடமான சுஷாந்த் சிங் மரணத்தில் பெரும் புள்ளிகள் இருந்ததால், அந்த வழக்கு விசாரணைகள் கமுக்கமாக நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இத்தனைக்கும் மகாராஷ்டிர காவல்துறை மட்டுமன்றி, சிபிஐ, அமலாக்கத்துறை, போதை தடுப்புக்கான என்சிபி என பல்வேறு விசாரணை அமைப்புகள் சுஷாந்த் சிங் வழக்கில் பங்கேற்றன. ஆனபோதும், தற்போது வரை சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. துனிஷா சர்மா என்ற இன்னொரு தற்கொலை வழக்கின் மத்தியில், இரண்டரை வருடங்களுக்கு முன்னரான சுஷாந்த் சிங் வழக்கு பொதுவெளியில் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.