இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார்

உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று(நவ.9) காலை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.

தேசத்தின் உயர்ந்த நீதிபரிபாலனம் கொண்ட பதவியை அலங்கரிக்கும் 50வது நீதியரசர் என்ற பெருமைக்கும் தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் உரித்தாகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவரது பதவிக்காலம் 2024, நவ.10 வரை நீடிக்கும். 49வது நீதிபதியாக இப்பதவியிலிருந்த உதய் உமேஷ் லலித், 74 தினங்கள் நீடித்த தனது பணிக்காலத்தின் நிறைவாக நேற்று ஓய்வு பெற்றார். செவ்வாயன்று குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு நீதிமன்ற விடுமுறை என்பதால் திங்களன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் விடைபெற்றார்.

நீதிபரிபாலனத்தில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர் டி.ஒய்.சந்திரசூட். இவரது தந்தை ஒய்.வி.சந்திரசூட், 16வது தலைமை நீதிபதியாக அப்பதவியில் நீண்ட நாள் வீற்ற பெருமைக்கு உரியவர். 1978, பிப்.22 முதல் 1985, ஜூலை 11 வரை, 7 ஆண்டுகள் 4 மாதங்கள் ஒய்.வி.சந்திரசூட் பதவியில் இருந்தார்.

டி.ஒய்.சந்திரசூட்டின் இரு மகன்களும் பிரபல வழக்கறிஞர்கள் ஆவர். ஆனால் அவரது மகன் ஒருவரை முன்னிறுத்தி, தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பதற்கு எதிராக வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கலானது. மும்பை உயர் நீதிமன்றத்தில் மகன் ஆஜராகும் வழக்கு ஒன்றுக்கு சாதகமாக டி.ஒய்.சந்திரசூட் தனது அதிகாரத்தை செயல்படுத்தியதாக குற்றம்சாட்டிய மனுதாரர், அதன் அடிப்படையில் அவரை தலைமை நீதிபதியாக அறிவிக்கக்கூடாது என்று முறையிட்டார். ஆனால் வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், சந்திரசூட் மீது நீதிமன்றத்துக்கு நம்பிக்கை இருக்கிறது என்று வழக்கை நிராகரித்தார்.

டெல்லி ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற டி.ஒய்.சந்திரசூட், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் பின்னர் அமெரிக்க ஹார்வார்ட் சட்டப் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றவர். முன்னதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in