ராணுவத் தொழில்பிரிவிற்கு சிக்கல்: ஆயிரக்கணக்கானோரை ஒப்பந்த முறைக்கு மாற்ற முடிவு?

ராணுவத் தொழில்பிரிவிற்கு சிக்கல்: ஆயிரக்கணக்கானோரை ஒப்பந்த முறைக்கு மாற்ற முடிவு?

இந்திய ராணுவத்தின் தொழில் பிரிவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான நிரந்தரப் பணியாளர்களை ஒப்பந்த முறைக்கு மாற்றப்படுவதாகத் தெரிகிறது.

இந்திய ராணுவத்தில் துப்புரவுப் பணியாளர், சமையல்காரர், நாவிதர் மற்றும் சலவை தொழிலாளர் உள்ளிட்ட சுமார் 20 வகையான தொழில் பிரிவினர் பணியாற்றுகின்றனர். இவர்கள் எண்ணிக்கை சுமார் 80,000 எனக் கருதப்படுகிறது. இவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் நிரந்தரத் தொழில் பிரிவினராகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களை படிப்படியாக ஒப்பந்தமுறை தொழிலாளர்களாக மாற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் திட்டமிடுகிறது.

இன்று ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியின்படி, இதன்மூலம் மத்திய அரசு தன் செலவுகளை குறைக்க முயல்வதாக தெரிய வருகிறது. இந்த தொகையை ராணுவத்துக்கான புதிய வகை ஆயுதங்களுடன் நவீனமாக்கத் திட்டமிடப்படுகிறது. இதேபோல், இந்திய ராணுவத்தின் பெரும்பாலான வீரர்களின் சராசரி வயது 32 என உள்ளது. இதை 24 முதல் 28 எனக் குறைக்கவும் ராணுவம் திட்டமிடுவதாகத் தெரிகிறது. இதனால், வரும் 2032 ஆம் ஆண்டிற்குள் ராணுவத்தின் பாதிபேர் அக்னிபத் திட்டத்தின் வீரர்களாகவே இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடியால் அறிவிக்கப்பட்ட இந்த அக்னிபத் திட்டம், பெரும் சர்ச்சைக்குள்ளானது. ராணுவத்தில் சேர்வோரில் பெரும்பாலானோரின் பணிக்காலம் வெறும் 4 வருடத்திற்கானது என்பதால், கிளம்பிய எதிர்ப்புகள் வட மாநிலங்களில் கடுமையாகின. போராட்டக்காரர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதில், அந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட ராணுவ சேர்ப்பு, அக்னிபத் திட்டம் மூலம் துவங்கியது. இதன் முதல்கட்ட தேர்வில் சுமார் 40,000 இளைஞர்கள் ராணுவத்தின் வீரர்களாகி உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்பட்டது ராஷ்டிரிய ரைபிள்ஸ் எனும் ராணுவப்பிரிவு. தற்போது தீவிரவாத நடவடிக்கைகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் செலவினங்களையும் வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு குறைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதில், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் வீரர்களையும் குறைத்து, மாற்றி அமைக்கவும் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in