புகையிலை மென்றதாக நிஹாங் சீக்கியர்களால் கொல்லப்பட்ட இளைஞர்: பெண்ணுடன் பேசிய புதிய சிசிடிவி காட்சி வெளியானது!

புகையிலை மென்றதாக நிஹாங் சீக்கியர்களால் கொல்லப்பட்ட இளைஞர்: பெண்ணுடன் பேசிய புதிய சிசிடிவி காட்சி வெளியானது!

பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் அருகே, நிஹாங் சீக்கியர்களால் இளைஞர் ஒருவர் புதன்கிழமை அன்று (செப்.7) வெட்டிக்கொல்லப்பட்டார். தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய அந்த இளைஞர் பொற்கோவில் இருக்கும் பகுதியில் புகையிலையை மென்றபடியும், மது அருந்தியதாகவும் அதனால் கோபமடைந்து நிஹாங் சீக்கியர்கள் அவரைக் கொலை செய்ததாகவும் முதலில் செய்திகள் வெளியாகின. நேற்று வெளியான சிசிடிவில் அவர் வெட்டிக்கொல்லப்பட்ட காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஆனால், இன்று வெளியாகியிருக்கும் புதிய சிசிடிவி காட்சிகளில், பைக்கில் செல்லும் அந்த இளைஞர் சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணிடம் பேச முற்படுவது பதிவாகியிருக்கிறது. அந்தப் பெண் அவரைப் பொருட்படுத்தாமல் நின்றிருக்கிறார். அப்போது நிஹாங் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இருவர் அங்கு வந்து அந்தப் பெண்ணிடம் ஏதோ பேசுகின்றனர்.

அதன் பின்னர் அந்த இளைஞரிடம் விசாரிக்கின்றனர். அப்போது தன் பைக் மீது ஏறி அங்கிருந்து கிளம்ப அவர் முயற்சிக்கிறார். ஆனால், ஒருவர் பைக்கின் ஹேண்டில்பாரைப் பிடித்து அதை நிறுத்துகிறார். அதன் பின்னர் அவரை அவர்கள் வெட்டிக் கொலை செய்ததாகத் தெரிகிறது.

புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து வேறு கோணத்தில் விசாரணை தொடங்கியிருக்கிறது.

அந்த இளைஞரின் பெயர் ஹர்மன்ஜீத் சிங் என்றும், விரைவில் வெளிநாடு செல்லவிருந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது. சாலையில் அத்தனை பேர் இருந்தும் அவரை யாரும் காப்பாற்றவில்லை என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். கொலை நடந்த இடத்திலேயே இரவு முழுவதும் அவரது சடலம் சாக்கடை அருகே கிடந்திருக்கிறது. மறுநாள் காலையில்தான் அது குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

நிஹாங் சீக்கியர்கள் யார்?

நிஹாங் சீக்கியர்கள், யாரேனும் சீக்கிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டால் கொலைசெய்யும் அளவுக்கு தீவிர மதப்பற்று கொண்டவர்கள். மத நிந்தனை செய்பவர்களைக் கொல்ல தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கருதிக்கொள்பவர்கள்.

அகாலிகள் அல்லது அகாலி நிஹாங்குகள் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் 10-வது சீக்கிய குருவான கோவிந்த் சிங் நிறுவிய கால்ஸா பந்த் எனும் பிரிவைப் பின்பற்றுபவர்கள். கருநீல ஆடையும் உயரமான தலைப்பாகையும் அணிந்திருக்கும் இவர்கள் வாள், துப்பாக்கிகள், கத்தி போன்ற ஆயுதங்களை எப்போதும் தங்களுடன் வைத்திருப்பார்கள். கொலை, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பல வழக்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in