‘குளிரவில்லையா என்ற கேள்வியை ஏழைகளிடம் ஏன் கேட்கவில்லை?’: ராகுல் சுளீர்!

சமூக ஊடகங்களில் தொடரும் ராகுல் - குளிர் விவாதம்
‘குளிரவில்லையா என்ற கேள்வியை ஏழைகளிடம் ஏன் கேட்கவில்லை?’: ராகுல் சுளீர்!

’பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பெயரில் ஒற்றுமை யாத்திரை நடத்தும் ராகுல் காந்தி, இரண்டு தினங்களுக்கு முன் டெல்லியில் நுழைந்தார். அப்போது வீசிய கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் அவர், வெறும் அரைக்கை அளவிலான டீ-ஷர்ட்டை மட்டும் அணிந்திருந்தார்.

இதில் ’அவருக்கு குளிர் அடிக்கவில்லையா? கடும்குளிரை ராகுல் எப்படி சமாளிக்கிறார்?’ என்பது போன்ற பலவிதமாக கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இவற்றை பகிரும் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளையும், ஐயங்களையும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுலிடம் எழுப்பியுள்ளனர்.

தற்போது, டெல்லியில் வீசும் கடும்குளிருக்கு அஞ்சி பலரும் தங்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் அவலம் நிலவுகிறது. வெளியே வருபவர்கள் உல்லன் குல்லாக்களுடன், குளிரிலான உள்ளாடைகள், ஸ்வெட்டர் மற்றும் தோல் ஜாக்கெட்டுகளும் அணியும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ராகுலுடன் நடைபயணம் செய்வோரும், உல்லனில் குளிராடைகள் அணியாமல் இல்லை.

ஆனால் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல், எந்தவிதமான குளிர் உடைகளும் அணியவில்லை. மாறாக கோடையில் அணியும் அரைகை டீ-ஷர்ட், பேண்ட் மற்றும் ஷூ மட்டுமே அணிந்துள்ளார். இது பற்றி கேட்பவர்களிடம் ராகுல் எதிர் கேள்வி எழுப்பி வருகிறார். ‘குளிரவில்லையா என என்னிடம் கேட்கும் கேள்விகள் இப்பகுதியின் மாணவர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளிடம் எழுப்புவதில்லை?’ எனக் கேட்கிறார்.

கார்கே மற்றும் கமல் உடன் ராகுல்
கார்கே மற்றும் கமல் உடன் ராகுல்

இதே கேள்வி அவருடன் கன்னியாகுமரி முதல் நடைபயணம் மேற்கொண்டு வரும் இளம் தலைவரான கன்னைய்யா குமாரிடமும் கேட்கப்பட்டது. இதற்கு அந்த இளம் தலைவர் கூறும்போது, ”பாஜகவினர் தொடர்ந்து ராகுலை விமர்ச்சித்து வெறுப்பை உமிழ்கின்றனர். அதிலிருந்து வெளியேறும் வெறுப்பு, நெருப்பாக ராகுலின் மீது படர்கிறது. இதற்கு அவரது தேகமும் பழகிவிட்டதால், ராகுலுக்கு குளிராடைகள் தேவைப்படவில்லை” எனக் குறிப்பிட்டார்.

இதுபோன்ற கேள்விகளை சமூகவலைதளங்களில் எழுப்பும் நெட்டிசன்கள், தாமே பதிலையும் பதிவேற்றி வருகின்றனர். அதில் லக்‌ஷமன் என்பவர், ‘கடும் குளிரைத் தாங்கும் ரகசியம் என்ன என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் ராகுல்! ராகுலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் அவர் டீ-ஷர்ட்டுடன் உலவுகிறார். வரும் காலங்களில் அவர் நம் நாட்டிற்கு தலைமை ஏற்க இந்த சக்தி அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதம் பெண் நெட்டிசன்களுக்கு இடையிலும் நீள்கிறது. அதில் ஒரு பெண் கூறுகையில், ‘டெல்லியில் 9 டிகிரிக்கும் குறைவாக குளிர் நிலவுகிறது. இந்த கடும்குளிரில் ராகுல் உல்லன் ஆடைகள் இன்றி வெறும் டீ-ஷர்டுடன் உலவுவதன் பின்னணியில் அவரிடம் உள்ள ’சக்திவாய்ந்த செல்வம்’ காரணமாகும்’ எனக் கிண்டல் அடித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை

சுமார் 2,800 கி.மீ தொலைவைக் கடந்து 108-ஆவது நாளில் ராகுல் டெல்லியில் நுழைந்தார். மீண்டும் கரோனா பரவல் மீதான கட்டுப்பாடுகளை பொறுத்து அவர் ஜனவரி 3-இல் காஜியாபாத் வழியாக உபியில் நுழைகிறார். இங்கிருந்து பஞ்சாப் வழியாக ஜம்மு-காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில், ஜனவரி 26-இல் அவரது நடைப்பயணம் முடிவடைய உள்ளது.

இதில், ‘மென்மேலும் உறையச்செய்யும் குளிர்கொண்ட ஜம்மு-காஷ்மீரிலும், ராகுல் அதே டீ-ஷர்ட்டையே தொடர்ந்து அணிவாரா..?’ எனும் கேள்வியும் இப்போதே எழத் துவங்கி விட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in