நேரலையில் நேபாள விமான விபத்து: நெஞ்சை உலுக்கும் வீடியோ

நேரலையில் நேபாள விமான விபத்து: நெஞ்சை உலுக்கும் வீடியோ

நேரலையில் ஒளிபரப்பான நேபாள விமான விபத்து, அதனை காண்போரை உலுக்கி வருகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பயணி ஒருவர் இந்த நேரலையை முகநூலில் ஒளிபரப்பியதும் தெரிய வந்துள்ளது.

நேபாளத்தில், தரையிறங்குவதற்கு சில விநாடிகள் முன்பாக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தோரில் 68 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 68 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களை உள்ளடக்கிய யெட்டி விமானம், காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 10.33 மணிக்கு கிளம்பியது. அரை மணி நேரத்தில் பொக்ரா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கி இருக்க வேண்டும்.

ஆனால் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியான 5 இந்தியர்களில் ஒருவர் சோனு ஜெய்ஸ்வால். நேபாள விமானம் விபத்துக்குள்ளானதன் நெஞ்சை உலுக்கும் துயரம் இவர் மூலமாகவே நேரலையில் வெளியுலகுக்கு தெரிந்திருக்கிறது.

சோனு ஜெய்ஸ்வால் தனது விமான பயண அனுபவத்தை முகநூல் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானத்தின் சாளரம் வாயிலாக பறவை பார்வையில் நிலவெளியும், பகுதியளவு தட்டுப்பட்ட விமானத்தின் இறக்கையும், அவரது நேரலை வீடியோவில் ஒளிபரப்பாகும்போதே, திடீரென பயணிகள் மத்தியில் கூச்சலும், அடுத்த விநாடியே விமானம் விபத்துக்குள்ளாவதும் பதிவாகி உள்ளது.

வான்பறத்தலை சிலாகிக்கும் பகிர்வான அந்த வீடியோவின் கடைசி விநாடிகள் காண்போரை பதைபதைக்கச் செய்கின்றன. விமானம் விபத்துக்குள்ளானதன் கோர சாட்சியமாக அந்த வீடியோ உள்ளது. விமானம் விபத்துக்குள்ளாவதும், அதே கணத்தில் ஜூவாலைகள் விமானத்துக்குள் பரவுவதும், பயணிகள் மத்தியிலான கூக்குரலும் இளகிய மனம் படைத்தோர் தவிர்க்க வேண்டியது. பார்ப்போரை பதறச் செய்யும் இந்த பதிவு, இனியொரு விபத்து இது போல நிகழக்கூடாது என்ற பரிதவிப்பையும் ஏற்படுத்துகிறது.

நேபாள விமான விபத்தில் பலியான இந்தியர்கள் உத்திரபிரதேச மாநிலம் காஸிபூரை சேர்ந்தவர்கள் என்பதும், சுற்றுலா நிமித்தம் நேபாளம் சென்றதும் தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in