திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்தத் தேர் காணப்படும்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நெல்லையப்பர் கோயிலில் தேரோட்ட நிகழ்வு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நடக்கும் தேரோட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஆனித்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. இதில், இன்று காலையில் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியர், விநாயகர் தேர்கள் இழுக்கப்பட்டன. அதன்பின்னே அம்பாள் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்திற்கு தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தேர் ரத வீதிகளிலும் வலம்வந்த நேரத்தில் ‘ஓம் நமச்சிவாயா’ என்னும் கோஷமிட்டுப் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதனால் திருநெல்வேலி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in