கடல் அரிப்பால் வாழ முடியாது; தூண்டில் வளைவு அமையுங்கள்: நெல்லை, தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம்

நாட்டுப் படகு மீனவர்கள் (கோப்பு படம்)
நாட்டுப் படகு மீனவர்கள் (கோப்பு படம்)கடல் அரிப்பால் வாழ முடியாது; தூண்டில் வளைவு அமையுங்கள்: நெல்லை, தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழை கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழை, கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பத்துக்கும் அதிகமான கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்றும் பாரம்பர்யம் மாறாமல் நாட்டுப்படகு மூலம் மீன்பிடித்து வருகின்றனர். இதில் கூடுதாழை கிராமத்தில் இதுவரை தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும் என்ற 25 ஆண்டுகாலக் கோரிக்கை கிடப்பில் கிடக்கின்றது.

இந்த நிலையில் கூடுதாழை மீனவ கிராமத்தில் கடந்த சில வாரங்களாகவே கடல் அலை சீற்றத்துடன் எழுவதும், மீனவர்களின் நாட்டுப்படகு, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் சேதம் அடைவதும் தொடர்கதையாக இருந்து வருகின்றது. இதில் பல மீனவர்களின் மீன்பிடி பொருள்களும் கடலுக்குள் சென்றதால் கூடுதாழை பகுதி மீனவர்கள் கடந்த பத்து நாள்களாகவே கடல் தொழிலுக்குச் செல்லாமல் தூண்டில் வளைவை உடனே அமைக்கக்கோரி தினசரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த மீனவர்களுக்கு ஆதரவாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் மொத்தமாக இன்று கடல் தொழிலுக்குச் செல்லாமல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 7000 நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

தற்போது நூறுஅடி வரை கடல் தன் எல்லையை விரித்து ஊருக்குள் வந்து இருப்பதாகவும், உடனே தூண்டில் வளைவு அமைக்காவிட்டால் கூடுதாழையில் மீனவர்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in