வினையான நட்பு... கொல்லப்பட்ட திண்டுக்கல் சகோதரர்கள்: ஓரினச்சேர்க்கையால் நெல்லையில் நடந்த விபரீதம்

உயிர் இழந்த மணிகண்டன்
உயிர் இழந்த மணிகண்டன்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெங்காய வியாபாரம் செய்துவந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர்கள் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர்களை குடிபோதை தகராறில் அண்ணன், தம்பி இருவர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதன் பின்னணியில் ஓரினச்சேர்க்கை விவகாரமும் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளி பார்த்திபன்
கொலையாளி பார்த்திபன்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன்கள் மணிகண்டன்(25), சபரீஸ்வரன்(13) இருவரும் வெங்காயத்தை மொத்தமாக லோடு ஆட்டோவில் ஏற்றி ஊர், ஊராகச் சென்று வியாபாரம் செய்துவந்தனர். மணிகண்டன் இந்த லோடு ஆட்டோவை ஓட்டுவதும், சபரீஸ்வரன் வெங்காயம்..வெங்காயம் என கூவி மக்களை அழைப்பதும் வழக்கம். நெல்லையில் வியாபாரம் செய்யவந்த இவர்கள் இதற்கென சுத்தமல்லி என்னும் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

கடந்த 15-ம் தேதிக்குப் பின்பு, இவர்களுக்கு குடும்பத்துடன் இருந்த அலைபேசித் தொடர்பு நின்றுபோனது. இதனால் இவர்களின் குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகள் மாயமானது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சுத்தமல்லி போலீஸார் அதுகுறித்து அவர்கள் காணவில்லை என நோட்டீஸூம் வினியோகித்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கொண்டாநகரம் காட்டுப்பகுதியில் அண்ணன், தம்பி இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

உயிர் இழந்த சபரீஸ்வரன்
உயிர் இழந்த சபரீஸ்வரன்

போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் சுத்தமல்லியில் அறை எடுத்துத் தங்கிய வெங்காய வியாபாரிகள் மணிகண்டன், அவரது தம்பி சபரீஸ்வரன் ஆகியோருக்கு கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார், அவரது சகோதரர் பார்த்திபன் ஆகியோரோடு பழக்கம் ஏற்பட்டது. இதில் சதீஸ்குமார் மீது ஏற்கெனவே பலவழக்குகள் நிலுவையில் உள்ளது. பார்த்திபன், சதீஸ்குமார் இருவருமே கஞ்சா பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தனர். இவர்களுக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இவர்கள் சேர்ந்து குடிக்கவும் ஆரம்பித்தனர்.

அந்த குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை முதலில் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து அதைப் பார்த்து கோபம்கொண்ட 13 வயதான சபரீஸ்வரனையும் கொலை செய்தனர். குடிபோதையில் தகராறு ஏற்பட்டாலும், ஓரினச் சேர்க்கை தொடர்பில் தான் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கஞ்சா, போதை, ஓரினச் சேர்க்கை என முறைகெட்ட வாழ்க்கை வாழ்ந்த சதீஸ்குமார், பார்த்திபன் சகோதரர்களால், வெங்காயம் விற்கவந்த மணிகண்டன், சபரீஸ்வரனின் குடும்பத்தினர் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் சிந்தும் சூழல் எழுந்துள்ளது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in