நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (செப்.7) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு விடைத்தாள் ஒஎப்ஆர் ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. அத்துடன் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவு நாளை வர இருப்பதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் நடைமுறைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நீட்’ தேர்வு முடிவு நாளை வெளிவர இருப்பதால் மாணவ-மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in