உங்கள் பிள்ளைகள் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்களா?- உங்களுக்கான பதிவு இது!

உங்கள் பிள்ளைகள் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்களா?- உங்களுக்கான பதிவு இது!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவணைத்து, கண்காணிக்க வேண்டிய தருணம் இது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. நீட் தேர்வு தோல்வி காரணமாகத் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கின்றன. அதுபோல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பல வருடங்களாகவே மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவு நீட் என்னும் தேர்வால் சிதைக்கப்படும் போது அவர்கள் தற்கொலை என்னும் விபரீத முடிவை எடுத்துவிடுகிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர்களின் தொடர் அழுத்தம் காரணமாகவே தற்கொலை முடிவுக்கு வருகிறார்கள். மாணவர்களின் இறப்பின் போது கண்டெடுக்கப்பட்ட கடிதங்களே இதற்குச் சாட்சி.

நீட் தேர்வில் இந்த முறை தோல்வியுற்றால் அடுத்த முறையும் எழுத முடியும். அதுபோல் நீட் தேர்வில் தேர்வு பெறமுடியாத எத்தனையோ பேர் பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக இருந்து வருகிறார்கள். நீட் ஒரு சாதாரண தேர்வு மட்டுமே! அது அறிவுக்கான சான்றிதழ் கிடையாது என்பதை மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் உணர வேண்டிய தருணம் இது. பிள்ளைகள் தோல்வியுற்றால் அவர்களுக்கு ஆறுதலாக இருந்து அரவணைக்க வேண்டியதும், அவர்களின் அசைவுகளைக் கண்காணிக்க வேண்டியதும் பெற்றோர்களின் பொறுப்பு. அட்வைஸ் என்ற பெயரில் அவர்களுக்குப் போதனைகளை வாரி வழங்காதீர்கள். மருத்துவம் கிடைக்க வில்லையென்ற ஆதங்கத்தில் வேறொரு குறிப்பிட்ட பாடப் பிரிவைப் படிக்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். பிள்ளைகளின் கருத்தைச் செவிமடுத்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த விதை விருட்சமாகும் என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. அதுபோல யார் எந்த உயரத்திற்குச் செல்வார்கள் என்பதை காலம் தீர்மானிக்கும்.

பெற்றோர்களே, அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள் !

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in