40 ஆயிரம் பெண்கள் எங்கே? அதிர வைக்கும் ‘குஜராத் ஸ்டோரி’!

கேள்விக்குள்ளான ’குஜராத் மாடல்’
சிறுமி கடத்தல் - சித்தரிப்புக்கானது
சிறுமி கடத்தல் - சித்தரிப்புக்கானது

குஜராத் மாநிலத்தின் 40 ஆயிரத்துக்கும் மேலான பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனதான தகவல் நாட்டை உலுக்கி வருகிறது. கேரள மாநிலத்தின் 32 ஆயிரம் பெண்கள் குறித்து ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எழுப்பிய சர்ச்சைகளுக்கு மத்தியில், குஜராத்தின் 40 ஆயிரம் பெண்கள் குறித்தான ஆதாரபூர்வ கேள்விகளும் கிளம்பின. இந்த பரிதவிப்புடன், பாஜக கட்டமைத்திருக்கும் ’குஜராத் மாடல்’ மீதும், அரசு தரப்பிலான தரவுகளே கல்லெறிந்திருக்கின்றன.

சமூக ஊடக மீம்: குஜராத் ஸ்டோரி - கேரளா ஸ்டோரி
சமூக ஊடக மீம்: குஜராத் ஸ்டோரி - கேரளா ஸ்டோரி

தீப்பிடித்த ’தி கேரளா ஸ்டோரி’

’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டீஸர் வெளியானபோது நாட்டில் பெரும் பதற்றம் எழுந்தது. ’கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து பெண்கள், ’லவ் ஜிஹாத்’ மூலம் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிகம் செயல்படும் சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகிறார்கள்’ என்பதே ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் கதை.

’எந்த தரவுகளின் அடிப்படையில் 32 ஆயிரம் கேரள பெண்கள், மதம் மாற்றப்பட்டு, நாடு கடத்தலுக்கு ஆளாவதாக இந்த திரைப்படம் சித்தரிக்கிறது’ என்ற கேள்வியை படக்குழு புறக்கணித்தது. ஆனால், அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் நீதிமன்றங்களை நாடியதும் படக்குழு சுதாரித்தது. 32 ஆயிரம் பெண்கள் என்ற எண்ணிக்கையை, 3 பெண்களாக சுருக்கி விளம்பரங்களைத் திருத்தினர். இந்த இடத்திலேயே ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மீதான நம்பகத் தன்மை அடிவாங்கியது.

தி கேரளா ஸ்டோரி
தி கேரளா ஸ்டோரி

ஆனபோதும் இந்துத்துவ அமைப்புகள் இந்தப்படத்தை கொண்டாடி தீர்த்தன. ’ஆயுதங்கள் ஏதுமின்றி ஒரு நாட்டை பயங்கரவாதிகள் எப்படி சீரழிப்பார்கள் என்பதை ’தி கேரளா ஸ்டோரி’ ஆவணப்படுத்தி இருப்பதாக’ மெச்சினார்கள். பாஜக ஆளும் மாநிலங்களான உபி, மபி மற்றும் உத்தராகண்ட்டில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டது. மகளிர் கல்லூரிகள் அனைத்திலும் இந்த திரைப்படம் வலிய திரையிடப்பட்டது.

’நாட்டின் கண்களான பெண்களை லவ் ஜிஹாத்திலிருந்து காக்க இது போன்ற திரைப்படங்கள் அதிகம் வெளியாக வேண்டும்’ என்று முழங்கினார்கள். கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை புகழ்ந்து இலவச விளம்பரம் செய்தார் பிரதமர் மோடி. ’தி கேரளா ஸ்டோரி’யை முன்வைத்து எழுந்த இந்த அலைகள் அத்தனையும், ’குஜராத் ஸ்டோரி’ குறித்தான கேள்வி முளைத்ததும் காணாமல் போயின.

இது குஜராத் ஸ்டோரி

2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 41,621 பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற பகீர் தகவல் வெளியானது. குஜராத்தின் காவல் நிலைய ஆவணங்கள் வாயிலாக சேகரித்து, ’தேசிய குற்ற ஆவணக் காப்பக’மான என்சிஆர்பி இதனை வெளியிட்டுள்ளது.

கடத்தல் - சித்தரிப்புக்கானது
கடத்தல் - சித்தரிப்புக்கானது

அரசு தரப்பிலான இந்த தரவுகளை வெறும் புரளி என்றோ, அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றோ எவராலும் நிராகரிக்க முடியாது போனது. கடத்தப்ப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள், குஜராத்துக்கு வெளியே பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாகவும், இதனையொட்டி பதற வைக்கும் தகவல்கள் வெளியாயின.

பெண்கள் காணாமல் போனதை விட, அவற்றை குஜராத் மாநில நிர்வாகம் எதிர்கொண்ட விதம் கண்டனங்களைச் சம்பாதித்தது. ’பெண்கள் காணாமல் போன வழக்குகளை குஜராத் போலீஸார் அலட்சியமாக கையாண்டதாகவும், விசாரணை நடைமுறைகளில் சுதந்திரத்துக்கு முந்தைய பிரிட்டீஷ் காலத்து மெத்தனத்தை பின்பற்றியதாகவும்’ காவல்துறையை தாளித்து எடுத்தார்கள். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா, முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜன் பிரியதர்ஷி உள்ளிட்டோர் ஊடகங்களில் அளித்த பேட்டிகள், குஜராத் மாடல் நல்லாட்சியை கேள்விக்குள்ளாக்கியது.

’குஜராத் மாடல்’ இதுதானா?

குஜராத் மாடல் வளர்ச்சி என்பதை முன்வைத்தே 2014 மக்களவை தேர்தலுக்கு, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. அங்கே மூன்று முறை முதல்வர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றதோடு, கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாஜக ஆட்சியே தொடர்ந்து வருகிறது. என்சிஆர்பி அறிக்கையில் வெளியான 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குஜராத் பெண்கள் காணாமல் போனதற்கு, குஜராத் ஆட்சியாளர்களால் எவரையும் குற்றம்சாட்ட இயலாது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம்
தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

’ தி கேரளா ஸ்டோரி’க்கு எதிராக கொதித்தெழுந்தவர்களை புதிய ‘குஜராத் ஸ்டோரி’ வாயடைக்கச் செய்தது. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத். குஜராத் மாடல் வளர்ச்சியையும், இரட்டை எஞ்சின் ஆட்சியின் சிறப்பு குறித்தும், பாஜக முன்வைக்கும் பிரச்சாரங்கள் அனைத்திலும் குஜராத்தே முன்னிலை வகிக்கும். ஆனால் சாலைகள், தொழிற்சாலைகள் என கட்டுமானங்களோடு ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அடையாளம் காணக்கூடாது என அடித்து சொல்லியிருக்கிறது ’குஜராத் ஸ்டோரி’ குற்றச்சாட்டுகள்.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’தி கேரளா ஸ்டோரி’ படங்கள் பாணியில், ’தி குஜராத் ஸ்டோரி’ எடுக்கலாமா?’ என்று பாஜகவை நக்கலடிக்கிறது சிவ சேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான ’சாம்னா’வின் தலையங்கம். ’குஜராத் வளர்ச்சியை அடைய பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று எதிர்வரும் தேர்தல்களில் எப்படி பாஜக குரல் எழுப்பும்’ என எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. உண்மையில், குஜராத்தின் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை, என்சிஆர்பி அறிக்கையை விட அதிகமிருக்கும் என்றே அவை கவலை தெரிவிக்கின்றன.

இந்தியாவின் சமூக கட்டமைப்பில் குடும்பத்தில் பெண் காணாமல் போனால், நீண்ட தயக்கத்துக்குப் பின்னரே காவல் நிலையங்களுக்கு செல்வதும், அங்கும் போலீஸாரின் இழுத்தடிப்பு மற்றும் தட்டிக்கழிப்புக்கு அப்பால் அவற்றில் எஃப்ஐஆர் பதிவாவதும் நடக்கும். இந்த வகையில், காணாமல் போன குஜராத் பெண்களின் எண்ணிக்கை என்சிஆர்பி தரவுகளை விட நிதர்சனத்தில் அதிகமிருக்கும் என்றும், அவை குறித்தான முழு ஆய்வுகளும், தரவுகளும் வெளியாக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

குஜராத்தில் காணாமல் போன பெண்கள் குறித்தான என்சிஆர்பி தரவு
குஜராத்தில் காணாமல் போன பெண்கள் குறித்தான என்சிஆர்பி தரவு

சரியும் குஜராத் பெருமை

40 ஆயிரம் பெண்கள் காணாமல் போனது மட்டுமல்ல, இதர பல புகார்களிலும் குஜராத் மாநிலத்தின் ஊதிப்பெருக்கப்பட்ட வளர்ச்சி பிம்பம் அம்பலப்பட்டு வருகிறது. குஜராத்தின் குறிப்பிட்ட சமூகத்தினர் பெருவாரியாக பங்குச்சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள். அவர்கள் மத்தியில், ’செபி’யின் விதிமுறைகளுக்கு மாறாக பங்குப்பரிவர்த்தனை முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்தில் கொழிப்போர் அதிகரித்து வருவதாகவும் நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி நிறுவனத்தின் முக்கிய முறைகேடாகவும் இதே பாணியை சுட்டிக்காட்டியது.

ஹிண்டன்பர்க் ஆய்வு - அதானி குழுமம்
ஹிண்டன்பர்க் ஆய்வு - அதானி குழுமம்

’அதானி குழுமத்தின் நிறுவனங்கள் பலவும், தங்களது செயல்பாடுகள் மற்றும் லாபமீட்டல் தொடர்பாக போலியான புள்ளிவிவரங்களை பரப்பிவிட்டு, அதன் மூலம் செயற்கையாக ஏற்றப்பட்ட பங்கு விலைகளின் வாயிலாகவே பெரும் லாபத்தை அடைந்திருக்கிறார்கள். மேலும். இந்த வீக்க வளர்ச்சியை காட்டியே மேலும் கடன்களையும் பெற்றிருக்கிறார்கள்’ என்பதே ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு.

ஹர்ஷத் மேத்தா காலம் தொட்டு குஜராத்திகள் மத்தியிலான பல்வேறு பங்குச்சந்தை மோசடி உத்திகளில், அதானியின் இந்த நேக்குப்போக்கை பின்பற்றியே மாநிலத்தின் சிறிதும் பெரிதுமான பங்குப்பரிவர்த்தனை நிறுவனங்கள் சாதித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் நீடிக்கின்றன. செபி உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளிலும், அதிகாரத்தின் பல்வேறு மட்டங்களிலும் குஜராத்திகளே விரவிக் கிடப்பதும், அவர்களுக்கு ஆதரவான நிரந்தர லாபியை உருவாக்கித் தந்திருக்கிறது.

இதுமட்டுமல்ல, கல்வித்துறை உள்ளிட்ட இதரவற்றின் பிம்பங்களும் அண்மைக்காலமாக தகர்ந்துள்ளன. மாநில அளவிலான போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு தொடங்கி, வெளிநாட்டு பணிகளுக்கான ’டோஃபல்’ தேர்வு வரை குஜராத் மோசடிகள் சர்வதேச அளவில் சந்தி சிரித்திருக்கின்றன. குஜராத்தின் தனி அடையாளமான தொழில்துறையில், ஆதார்-ஜிஎஸ்டி முறைகேட்டின் அடிப்படையிலான ’போலி பில்’ ஊழல்களும் மாநிலத்தை தலைகுனியச் செய்திருக்கின்றன.

குஜராத்தின் முன்மாதிரியான மதுவிலக்கும் அங்கே பலமுறை குட்டு உடைந்திருக்கிறது. கள்ளச்சாராய முறைகேடுகள் மட்டுமன்றி, அண்மை குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போது பெருக்கெடுத்தோடிய மது வெள்ளம் வாக்காளர்களை வாயடைக்கச் செய்திருக்கிறது. மது மட்டுமன்றி, எல்லை மாநிலங்களுக்கே உரிய போதைப்பொருள் கடத்தல் அங்கே அச்சுறுத்தலாக வளர்ந்து வருகிறது. முந்த்ரா துறைமுகத்தில் பிடிபட்ட 3 ஆயிரம் கிலோ ஹெராயின் இந்திய போதைத்தடுப்பு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது.

பாஜக சுதாரிக்குமா?

40 ஆயிரம் பெண்கள் காணாமல் போனது மட்டுமல்ல, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான வேறு விவகாரங்களிலும் குஜராத்தின் போக்கு விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில், தண்டனை குற்றவாளிகளை சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவித்ததும் உச்ச நீதிமன்றம் வரை குட்டுக்கு ஆளானது. கூட்டு பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களை, மாலை மரியாதையோடு வரவேற்ற விதமும் குஜராத் பெண்களை முகம் சுழிக்கச் செய்திருக்கிறது.

மாலை மரியாதையுடன் வரவேற்கப்பட்ட பில்கிஸ் பானு (உள்படம்) வழக்கின் தண்டனைக் குற்றவாளிகள்
மாலை மரியாதையுடன் வரவேற்கப்பட்ட பில்கிஸ் பானு (உள்படம்) வழக்கின் தண்டனைக் குற்றவாளிகள்

பாஜக முன்னெடுக்கும் வெறுப்பரசியல் உத்தியில், வாக்காளர்களை பிரித்தாள்வதும், தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லாதவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதும், அம்மக்களின் அறைகூவல்கள் செவிமெடுக்காததும், அக்கட்சிக்கு எதிரான முக்கிய பழியாக நீடிக்கிறது. 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதில் கூட, கிராமப்புறங்களை சேர்ந்த சமூக அடுக்கில் கீழுள்ள குடும்பங்களின் அங்கத்தினர்களே இப்படியான கடத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்றும், அதனாலேயே அவர்களை குஜராத் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.

என்சிஆர்பி அறிக்கை வெளியான 24 மணி நேரத்தில், குஜராத் காவல்துறை மறுப்பு தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில், காணாமல் போன 40 ஆயிரத்துக்கும் மேலான பெண்களில் சுமார் 95% பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தார் வசம் சேர்க்கப்பட்டதாக இரண்டொரு வரிகளில் விளக்கமளிக்கப்பட்டது. அதற்கு அப்பால் ஆவணங்களோ, மேலதிக விவரங்களோ இல்லை.

வெளிநாட்டு சதி, ஊடகங்களின் இட்டுக்கட்டல் என வழக்கமான தப்பித்தல்கள் எதற்கும் வாய்ப்பில்லாததில், என்சிஆர்பி அறிக்கையை முன்வைத்து ’குஜராத் மாடல்’ பொதுவெளியில் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. எதிர்வரும் தேர்தல்களிலும் அவை எதிரொலிக்கும்பட்சத்தில் பாஜகவுக்கு தீராத தலைவலியாக அவை மாறினாலும் வியப்பில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in