கண்முன்னே உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற போராடிய கணவன்: மெரினாவில் சோகம்

கண்முன்னே உயிரிழந்த கர்ப்பிணி மனைவி; வயிற்றில் இருந்த குழந்தையை காப்பாற்ற போராடிய கணவன்: மெரினாவில் சோகம்

கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதி கடற்படை அதிகாரியின் 8 மாத கர்ப்பிணி மனைவி உயிரிழந்தார். கணவருடன் பைக்கில் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னை பல்லவன் சாலையில் அருகே உள்ள கடற்படை குடியிருப்பில் வசித்து வருபவர் சிவாரெட்டி. கடற்படை அதிகாரியான இவரது மனைவி லலிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் நேற்றிரவு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார் கடற்கரையில் சிறிது இருந்து விட்டு பின்னர் இருவரும் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மெரினா காமராஜ் சாலை மாநிலக்கல்லூரி அருகே வரும் போது இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது லலிதா தலையில் பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவயிடத்திலேயே அவர் உயிரிழந்தார். கணவர் சிவாரெட்டி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தன் கண் முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்ததை கண்டு கதறிய சிவாரெட்டி, வயிற்றில் இருந்த குழந்தையையாவது காப்பாற்ற எண்ணி உடனே ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீஸார் லலிதா உடலை மீட்டு கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் குழந்தையும் உயிரிழந்தது. இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கடற்படை பேருந்து ஓட்டுநர் ராகேஷ்குமார்(29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்படை அதிகாரி கண்முன்னே மனைவி கடற்படை வாகனம் மோதி உயர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in