நித்திரைக்கு உத்திரவாதம் அளிக்கும் நிற சிகிச்சை!

இயற்கையோடு இயைந்து வாழ்வோம் -12
நித்திரைக்கு உத்திரவாதம் அளிக்கும் நிற சிகிச்சை!

நவீன வாழ்வியல் பிரச்சினைகளில் ஒன்றான தூக்கமின்மை குறித்த, தூக்கமின்மை போக்கும் இயற்கை மருத்துவம் என்ற நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி இது.

தூக்கமின்மை குறித்தும், அதன் வகைகள், பாதிப்புகள், இளம் வயதினர் மத்தியிலான தூக்கமின்மை, அவற்றை போக்குவதற்கான வழிமுறைகளில் தியானம் மற்றும் யோக முத்திரை உள்ளிட்டவை குறித்தும் முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தூக்கமின்மை போக்கும் இதர வழிமுறைகளையும், தூக்கத்துக்கு தேவையான மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளையும் இங்கே பார்ப்போம்.

ஆழ் நித்திரையில் ஆழ்த்தும் நிற சிகிச்சை

தூக்கமின்மை போக்கும் உபாயங்களில் அடுத்து வருவது நிற சிகிச்சை. தூக்கம் தருவிப்பதில் நிறத்துக்கு முக்கிய பங்குண்டு. பதட்டம் தணித்து இயல்பான எண்ணவோட்டத்துக்கும் இந்த நிறம் என்பது பெரிதும் உதவும். மருத்துவமனை வளாகங்களின் உள்ளே கவனித்தால் இது புரியும்.

தூங்கச் செல்லும் முன்னர் நீல நிறத்தை அல்லது அது தொடர்பான பொருட்களை பார்ப்பது, படுக்கை அறையின் அலங்காரங்கள் மற்றும் அங்கமானவற்றை நீல நிறத்தில் அமைப்பது, படுத்த பின்னரும் கண்கள் மூடி நீல நிறம் மற்றும் அதிலானவற்றை கற்பனை செய்வது ஆகியவை இந்த நிற சிகிச்சைக்கு உதவும். ஆகாயம், கடல், நதி, பூக்கள் என நீலத்தில் ஆழ்ந்த பொருட்கள் எதை வேண்டுமானாலும் மனதில் ஓடச் செய்யலாம்.

ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..

தூக்கம் தருவிப்பதற்கான அடுத்த உபாயமாக, யோகா மற்றும் இயற்கை மருத்துவரை அணுகி உடலை தளர்வடைச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ’ரிலாக்‌சேஷன் டெக்னிக்ஸ்’ பழகலாம்.

ஆழ்மனதை பீடித்த கவலைகளும் வேதனைகளும் தூக்கம் தொடங்கி பல்வேறு உடல் - மனம் சார்ந்த உபாதைகளை வரவழைக்கும். அவ்வாறு உடலைத் தளர்வடையச் செய்யும் நுட்பங்களை முறையாகப் பழகினால், எளிதில் உறக்கத்தில் ஆழலாம். ஆழ்மனதை அழுத்திக்கிடந்த கசடுகள் வெளியேறினால் தூக்கம் சுலபமாகும். இவற்றில் ’இன்ஸ்டன்ட் ரிலாக்ஸேசன்’ என்னும் உடனடி தளர்வுக்கான நுட்பம் இன்னும் உதவிகரமாக இருக்கும்.

தூக்கத்துக்கான ஆசனங்கள்

சவாசனம், மகராசனம் என 2 ஆசனங்கள் தூக்கத்தை தருவிப்பதில் முக்கியமானவை. ஆசனமாக இல்லாது போனாலும், குழந்தைப் பருவம் தொடங்கி இந்த இரண்டையுமே நமது அன்றாடங்களில் இயல்பாக கைக்கொள்பவைதான். முறையான உறக்கம் இல்லாதவர்கள், அந்த இயற்கை பாணியை ஒட்டியே இந்த ஆசனங்களை பழகினால், தூக்கத்தில் ஆழ்வது எளிதாகும்.

சவாசனம்
சவாசனம்

சவாசனம் என்பது அதன் பொருள் போலவே சவம் என கிடப்பது. மல்லாந்து படுத்து, உடல் தளர்த்தி, சுவாசத்தில் கவனம் இருத்தி, சிலையென கிடந்து பழகலாம். இதையே குப்புறப் படுத்து முதலை போல முகம் தூக்கியிருப்பது மகராசனம் ஆகும். பொதுவாக ஆசனங்கள் என்பதை முறையாக கற்றுக்கொள்வது அவசியம். அதிலும் இந்த ஆசனங்கள் அவற்றில் இன்னும் எளிமையானவை என்பதால் எந்த வயதினரும் கைக்கொள்ளலாம்.

அக்குபங்சர், அரோமா எண்ணெய்

அக்குபங்சர் வாயிலாக உடலின் குறிப்பிட்ட சில புள்ளிகளை தூண்டிவிட்டு, தடைபட்ட ஆற்றல் ஓட்டத்தை திறந்துவிடுவதன் மூலமும் தூக்கத்தை வரவழைக்கலாம்.

அடுத்து அவரவருக்கு பிடித்த அரோமா எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், கைக்குட்டையில் சில சொட்டுகள் விட்டு தலையணையில் வைத்துக்கொள்வதன் மூலம் அவற்றின் பயனை அடையலாம்.

உணவில் கவனம்

காபி, டீ, காற்றடைத்த மென் பானங்கள், புகையிலை சார்ந்த பொருட்கள் போன்றவை தூக்கத்தை தூர அடிக்கும். இந்த வரிசையில் இனிப்புப் பொருளான சாக்லேட் என்பதையும் சேர்க்கலாம். தூக்கம் குலைந்தவர்கள் இவற்றை தவிர்ப்பதுடன், அன்றாட உணவில் வெள்ளைச் சர்க்கரையை குறைப்பதும் நல்லது.

குறிப்பாக இரவு நேரத்தில் அல்லது தூங்கப் போகும்போது இவற்றை உட்கொள்வதால், தூக்கம் முழுமையற்று இடையிடையே துண்டாடப்படும். இதன் விளைவாக காலையில் கண் விழித்த பிறகும், தூங்கி எழுந்ததன் பயனை உணர முடியாது தவிப்பார்கள்.

தூக்கம் தொலைத்தவர்கள் அவற்றை தருவிக்கும் செரட்டோனின் - மெலட்டோனின் ஹார்மோன் ஜாலத்துக்கு அவசியமான அமினோ அமிலங்கள் அதிகம் கொண்ட உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி6, முழு தானியங்கள், வாழைப்பழம், கோதுமை ஆகியவற்றுடன் மெக்னீசியம் கணிசமாக அடங்கிய ஓரிரு பாதாம் அன்றாடம் உட்கொள்வதும் தூக்கம் வாய்க்க உதவும்.

பாதாம்
பாதாம்

2 பாதாம், 8 பூசணி விதை, அரை டீஸ்பூன் கசகசா ஆகியவற்றை அரை குவளை தண்ணீர் அல்லது பாலில் அரைத்து எடுத்து, படுக்கச் செல்வதற்கு முன்னர் அருந்தலாம். அன்றாட உணவில் மெக்னீசியம் மற்றும் செலினியம் அதிகமுள்ள கீரைகளையும் தொடர்ந்து சேர்த்து வரலாம்.

குழந்தைப் பருவத்தினருக்கு இரவில் வெதுவெதுப்பான பசும்பால் அருந்தச் செய்வது ஆரோக்கியமான தூக்கத்தை பழக்கும். அனைத்து வயதினரும், உடலில் கழிவுகள் தேங்காது பராமரிப்பது அன்றாட தூக்கத்தை பாதிக்காது இருக்க உதவும். இதற்கு உதவும் வகையிலான ’க்ரீன் டீ’ என்பதை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

அரை டீஸ்பூன் பட்டை, 5 கிராம் அதிமதுரம், 5 புதினா இலைகள், சிறு துண்டு இஞ்சி ஆகியவற்றை, சுவைக்காக நாட்டுச் சர்க்கரை கலந்து வழக்கமான டீ தயாரிப்பாக மேற்கொண்டு பருகலாம்.

தூக்கம் தருவிக்கும் உணவுகள்
தூக்கம் தருவிக்கும் உணவுகள்

நீடித்த பாதிப்புகளுக்கு மருத்துவ உதவி

இவற்றுக்கு அப்பால், இதர உடல்நலக் கோளாறுகள் காரணமாக தூக்கம் பிடிபடாது அவதிப்படுவோர், உடனடியாக மருத்துவரை நாடி அந்தக் கோளாறுகளில் இருந்து விடுபட முறையான சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக அடிக்கடி உடல் வலி காண்பவர்கள், ஆஸ்துமா பாதிப்பு, நீடித்த அஜீரணக் கோளாறு மற்றும் மன அழுத்தத்தால் துன்பப்படுவோர், முறையாக அவற்றிலிருந்து விடுபட்டாலே அவர்களின் தூக்கத்துக்கான தடைகள் தாமாக மறையும்.

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in