சியாட்டிக் நரம்பு வழி பரவும் வலி: இயற்கை வழிகளில் நிவாரணம் பெறுவது எப்படி?

இயற்கையோடு இயைந்து வாழ்வோம் -09
சியாட்டிக் நரம்பு வழி பரவும் வலி: இயற்கை வழிகளில் நிவாரணம் பெறுவது எப்படி?

தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. இயற்கை யோகா மருத்துவ முறைகளின் வாயிலாக இந்த சியாட்டிகாவினால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் பெறுவது குறித்து இங்கே பார்க்கப்போகிறோம்.

சியாட்டிக் நரம்பு - சியாட்டிகா வலி

சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு செல்லக் கூடியது.

உடலின் முக்கிய வேலையாக, தண்டுவடத்துக்கும் கால் தசைகளின் இயக்கத்துக்கும் இடையே செயல்பாட்டை தீர்மானிப்பதில் சியாட்டிக் நரம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நரம்பின் வழியாக பயணப்படும் வலியை சியாட்டிகா என்கிறோம்.

சியாட்டிக் நரம்பில் நாட்பட்ட அழுத்தம் கிடைப்பதால் வலி தோன்றுகிறது. இந்த வலி இடுப்பில் தொடங்கி கால் மற்றும் பாதத்தில் எரிச்சலாகவும், குடைச்சலாகவும் உணரப்படுகிறது. வெகு நேரம் அமர்ந்திருந்து எழும்போதும், குனிந்து நிமிரும்போதும், எடைகளை தூக்கும்போதும் இவை அதிகமாக தென்படும். சியாட்டிகா பாதிப்பு கண்டவர்கள் கால்கள் மரத்துப்போவது, மதமதப்பாக உணர்வது, குத்தலான வலி, இடுப்பிலிருந்து காலுக்கான பலவீனத்தை உணர்வது ஆகியவற்றை அதிகம் எதிர்கொள்வார்கள்.

வலி போக்கும் கை நுட்ப சிகிச்சை, அக்குபங்சர்

இந்த பாதிப்பிலிருந்து தப்பும்பொருட்டு, அதிகளவில் வலி நிவாரணிகளை எடுப்பது வழக்கமாக இருக்கிறது. பக்கவிளைவுகள் உடைய வலி நிவாரணிகளை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் நிவாரணம் பெற விரும்புவோருக்கு இயற்கை மற்றும் யோக மருத்துவத்தில் இயற்கையான வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைதோறும் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களை நாடலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டுவடத்தை சீர்செய்யும் சிகிச்சையை இவர்கள் மேற்கொள்வார்கள். பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மேற்கொள்ளும் சிகிச்சையில் தண்டுவடத்தில் சொடக்கு விழுவதுபோல சிறிய சத்தத்தையும் உணரலாம். இதன் மூலம் தண்டுவடத்தில் நீடித்த அழுத்தம், தண்டுவட வட்டுக்கள் மற்றும் வட்டுகளுக்கு இடையேயான சவ்வு பிசகியிருப்பது போன்றவை குணமாகும். இந்த கை நுட்ப சிகிச்சை உடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வேறு சில பயிற்சிகளையும் பெறும்போது நாளடைவில் குணம் பெறலாம்.

இதன் மூலம் வலி நிவாரணிகளை உட்கொள்ளாது, அறுவை சிகிச்சைக்கு அவசியமின்றி, நீண்ட காலமாக அவதிப்பட்டிருந்த சியாட்டிகா பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

கூடுதலாக அக்குபங்சர் சிகிச்சையும் எடுத்துக்கொள்வது, நமது உடலின் ஆற்றல் சக்தி சீரான ஓட்டத்துக்கும் உதவிகரமாகும். இந்த ஆற்றல் ஓட்டத்துக்கு உடலில் எங்கெல்லாம் அடைப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நாளடைவில் வலி மற்றும் வீக்கத்தை உணரலாம். அக்குபங்சர் இந்த அடைப்பை நீக்கி ஆற்றல் ஓட்டத்தை இயல்பாக்குவதன் மூலமாக, வலியிலிருந்தும் வீக்கத்திலிருந்து விடபட ஏதுவாகும்.

உணவே மருந்து

சியாட்டிகா வலி கண்டவர்கள் அன்றாடம் மஞ்சள் தண்ணீர் உட்கொண்டு வரலாம். ஒரு குவளை நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம். இதனை தினத்துக்கு 3 வேளை உட்கொள்ளும்போது, மஞ்சளின் வேதிப்பொருட்கள் சியாட்டிகா நரம்பு உபயத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கூடுதலாக சிறிதளவு வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த வெந்தயத்தையும், நீரையும் விழுங்குவது நிவாரணம் தரும்.

பூண்டின் மருத்துவ குணங்கள் ஏராளம். உடலின் இரத்த அழுத்த பராமரிப்பு மற்றும் கொழுப்பு குறைப்பு ஆகியவற்றின் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் பேணுவதில் பூண்டின் நற்குணங்கள் உதவுகின்றன. கூடுதலாக உடலுக்குள் காணப்படும் அழற்சிகளை போக்கவும் உதவும் என்பதால், பூண்டின் மருத்துவ குணங்கள் சியாட்டிக் பாதிப்பு கண்டவர்களுக்கு அவசியமாகும். பூண்டின் 4 பற்களை வெறும் கடாயில் பச்சை வாடை போக்கும் அளவுக்கு சற்றே வதக்கி எடுத்து, அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்வதன் வாயிலாகவே பூண்டின் நற்பயன்களை நாம் பெற வாய்ப்பாகும்.

தசைகளை இலகுவாக்குவதிலும், தூக்கத்தை தருவிப்பதிலும் ஜாதிக்காயின் உட்பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜாதிக்காயை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து உட்கொள்ளலாம். ஜாதிக்காயின் நற்பயன்களை அரோமா எண்ணெயாகவும் பெறலாம். இதன் சில துளிகளை தேங்காய் எண்ணெயில் கலந்து வலி கண்ட இடங்களில் தடவி வரலாம்.

எச்சரிக்கை

அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சில எச்சரிக்கை குறிப்புகளை பின்பற்றுவதன் வாயிலாகவும் சியாட்டிக் பாதிப்பு தீவிரம் பெறாது தவிர்க்க இயலும். குறிப்பாக முன்பக்கம் குனிவது, முறையற்ற வகைகளில் எடை தூக்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எடை தூக்கியே ஆகவேண்டும் என்ற சூழல் எழுந்தால், இரு கரங்களிலும் சமமான எடையை பராமரிப்பது அந்த எடையும் 5 கிலோவுக்கு மிகாமல் இருப்பது உள்ளிட்ட எச்சரிக்கைக் குறிப்புகளை பின்பற்றுவதும் அவசியம்.

ஆசனங்கள், பிராணாயாமம்

மேலும் இங்கே தரப்படும் 2 ஆசனங்கள் மற்றும் 1 பிராணாயாமம் ஆகியவற்றை பழகுவதும், தொடர்ச்சியாக பின்பற்றுவதும் சியாட்டிக் தொந்தரவுகளில் இருந்து விடுபட உதவும்.

நாகம் தலையைத் தூக்கும் வடிவத்தை ஒத்த புஜங்காசனம் பயில்வது உடலுக்கு தளர்வு அளிப்பதுடன், தண்டுவடத்துக்கும் நல்ல பயிற்சியாகும். பாலத்தின் தோற்றத்தினை ஒத்த சேதுபந்தாசனம் பயில்வதும் உதவும். இந்த இரு யோக நிலைகளிலும் தினம்தோறும் நாலைந்து எண்ணிக்கைகளிலும், ஒவ்வொரு முறையில் தலா பத்து விநாடிகளுக்கு சுவாசம் பெறும் வகையிலும் பயில்வது நல்லது. உரிய பயிற்சியாளர் அல்லது இயற்கை யோகா மருத்துவரிடம் பயிற்சி பெற்று, தினந்தோறும் பழகுவது உடலுக்கு நீடித்த பலன்களை அளிக்கும்.

கூடுதலாக, நாடி சுத்திக்கு உதவும் நாடி ஷோதனா என்கிற பிராணாயாமம் பயில்வதும் சிறப்பான இயற்கை வலி நிவாரணியாக உதவும்.

மருத்துவ ஆலோசனை அவசியம்

இந்த யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சிகளில் இறங்குவதற்கு முன்னர் இயற்கை யோகா மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெறுவது நல்லது. சியாட்டிக் வலியின் மூலம் குறித்தும், அதனை போக்குவதற்கான இதர வழிமுறைகள் குறித்தும், அவரவர் பாதிப்புக்கு ஏற்றபடி யோகா மற்றும் பிராணாயாமம் நிலைகள், அவற்றை எத்தனை முறை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் தெளிவு பெற அவர் உதவுவார். அவசியமெனில் பரிந்துரைக்கேற்ப இடுப்புக் குளியல், தண்டுவடக் குளியல், வாழை இலைக் குளியல், மண் குளியல் போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் கூடுதல் நிவாரணத்துக்கு உதவும்.

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in