நீரிழிவு நோயாளிகள்: கரும்பு விரும்பி சாப்பிடலாமா?

இயற்கையோடு இயைந்து வாழ்வோம் -05
நீரிழிவு நோயாளிகள்: கரும்பு விரும்பி சாப்பிடலாமா?

பண்டிகைகள் என்றுமே இனிமையானவை. இனிப்பு சேராத பண்டிகை கிடையாது. தமிழர் திருநாளும், இயற்கையை வணங்கக் கூடியதுமான பொங்கல் திருநாட்களுக்கு சேரும் இனிப்பும் இயற்கையாகவே அமைந்திருக்கும். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் கூட கன்னல் கரும்பு உண்ணும் போக்கு பின்தொடரவே செய்யும். இந்த கரும்பை முன்வைத்து நாம் இயற்கையை வணங்குவதிலும், நன்றி செலுத்துவதிலும் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்தளவுக்கு உடலுக்கு கரும்பு நன்மை பயக்கக்கூடியது கரும்பு. பொங்கலுக்கு என்றில்லை ஆண்டு முழுவதும், அனைத்து வயதினரும் அன்றாடம் கரும்பு உண்ணலாம்.

சுவை அரும்புகள் கோரும் சுவை

மனித உடலுக்கு அறுஞ்சுவையும் அவசியமானது. பாரம்பரிய பண்டிகையான பொங்கல் கொண்டாட்டத்தின் படையலை கவனித்தாலும் அதன் பொருளை உணரலாம். அறுஞ்சுவைக்கான உணவுகள் அங்கே பரிமாறப்பட்டிருக்கும். இனிப்பு அவற்றில் பிரதானமானது. பொங்கும் பொங்கல் முதல் கரும்பு வரை அந்த இனிப்பு அங்கே அதிகம் வியாப்பித்திருக்கும்.

அறுஞ்சுவைகளில் அரசனாக இனிப்பை நாம் பாவிக்கிறோம். அதாவது இயற்கையாவே நமது உடல் இனிப்பை கோருகிறது. ஏனெனில் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை இனிப்பு மட்டுமே வழங்கும். இனிப்பை உண்டவர்கள் உடல் சக்திக்கான புத்துணர்வு முதல் சுவைக்கான கிளுகிளுப்பு வரை வயதுக்கு ஏற்றவாறு உணர்வார்கள். குழந்தைகள் இயல்பாக இனிப்பை நாடுவதும், நமது நாவின் சுவை அரும்புகள் இனிப்பை கொண்டாடுவதன் பின்னணியிலும் இயற்கையின் விளையாட்டு இருக்கிறது.

சத்துக்கள் ஏராளம்

கரும்பில் கார்போஹைட்ரேட் உண்டு. விட்டமின் சி மற்றும் பி2, மெக்னீசியம், இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் என உடலுக்கு அவசியமான தாதுப்பொருட்கள் கரும்பில் நிறைந்திருக்கின்றன. கொழுப்பு, புரோட்டீன், உப்பு கிடையாது. கரும்பில் பொதிந்திருக்கும் குளுக்கோஸ் என்பது ஆரோக்கியமான சர்க்கரையில் சேரும். கரும்பு ஜூஸ் அருந்துவோர் சிறிதளவு இஞ்சி சேர்த்துக்கொள்வது மிகுந்த பயனளிக்கும்.

பசியோடு இருப்பவர்கள் கரும்பை சுவைத்தால் பசியடங்குவார்கள்; வயிறு முட்ட உண்டவர்கள் கரும்பு ருசிப்பது ஜீரணத்துக்கு உதவும் என்பார்கள். பொங்கல் பண்டிகை தினங்களில் பதார்த்தங்களை வயிறு புடைக்க வேட்டையாடும் குழந்தைகளுக்கு கரும்பு துண்டுகள் அல்லது கரும்புச் சாறு கொடுத்தால், ஓரிரு ஏப்பங்களுடன் இயல்புக்கு திரும்புவார்கள். அன்றாடம் கரும்புச் சாறு எடுத்துக்கொள்வது, உடல் உள்ளுறுப்புகளுக்கு மிகவும் நல்லது.

பலனடையும் உடல் உள்ளுறுப்புகள்

வயிறு, சிறுநீரகம், கண்கள், இதயம், மூளை முக்கியமாக இனப்பெருக்க மண்டலம் என உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு கரும்பின் சத்துக்கள் துணை புரிகின்றன. இந்த உள்ளுறுப்புகளில் கல்லீரலும் அடங்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரும்பு சாறு மருந்தாக உதவும். இரத்தத்தில் பிலிருபின் அளவை குறைப்பதில் கரும்புச் சாறு இயற்கையாக உதவும். பித்தம் தணிக்கச் செய்யம். சிறுநீர் பெருக்கை ஊக்குவிக்கும். சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் மற்றும் கடுக்கிறது என்பவர்கள், பொங்கல் சீஸனில் பரவலாக கிடைக்கும் கரும்பை விரும்பி உண்ணலாம்.

சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது தடுப்பதிலும், நெஃப்ரான்களின் செயல்பாட்டைத் தூண்டவும் கரும்பின் சத்துக்கள் துணை புரிகின்றன. சிறுநீரக பாதையில் தொற்று கண்டவர்கள் கரும்பு தொடர்ந்து உண்ணும்போது தொற்று விலகும்; ஏற்படாது தவிர்க்கும். புரோஸ்டேட் வீக்கம் கண்ட ஆண்களுக்கு, அதனால் ஏற்படும் வலி முதல் அதிகம் வீக்கம் தொடர்பான தொந்தரவுகள், கரும்பு உண்ணும்போது குறைய வாய்ப்பாகும்.

சளி பிடிக்குமா?

கரும்பு என்பது இயற்கையான நோயெதிர்ப்பு மற்றும் தடுப்புக்கான உணவாகும். சளி உட்பட சீஸனில் பரவும் தொற்றுக்களை தடுப்பதில் கரும்பு முக்கிய பங்காற்றுகிறது. தொண்டையில் எரிச்சல் கண்டவர்களுக்கும் கரும்பு மாமருந்து ஆகும். காய்ச்சல் காரணமாக உடலின் நீர்ச்சத்தினை இழந்து சோர்வு கண்டவர்களுக்கு சிறு துண்டு கரும்பு தந்தால் புத்துணர்வு பெறுவார்கள்.

சிறு துண்டு மட்டுமே தர வேண்டும். கரும்பு உட்பட எந்த உணவையும் அளவோடு உட்கொள்வது நல்லது. கரும்பை முக்கியமாக இரவில் உண்ணக்கூடாது. சிலர் கரும்பு உண்டதால் சளி பிடித்தது என்பார்கள். உடலில் உறைந்திருக்கும் கபத்தை வெளியேற்றும் மருந்து என்பதாகவே கரும்பை அடையாளம் காண வேண்டும். உடலின் அமிலத்தன்மையை சமநிலையாக்கும் அல்கலைன் வகையை சேர்ந்தது கரும்பு உணவு. இந்த வகையிலும் உடல் தவிர்க்கக்கூடாத சத்து உணவுகளில் கரும்பும் சேர்கிறது.

நீரிழிவு நோயாளிகள் கரும்பு உண்ணலாமா?

கரும்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய உட்பொருட்களுடன் ஒப்பிடுகையில், அதன் சர்க்கரை அளவு பின்தங்கி விடுகிறது. இயற்கையான இந்த சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலும் புத்துணர்ச்சியும் கொடுக்கக்கூடியவை. நல்ல நாளும் அதுவுமாக சிறு துண்டேனும் கரும்பு ருசிக்கலாமா என்று சப்புக்கொட்டும் நீரிழிவு நோயாளிகள் கரும்பை அளவோடு எடுத்துக்கொள்ளலாம். அப்போதைக்கு உண்ணும் உணவை வெகுவாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு கரும்பு உண்ணலாம். கரும்பின் அளவிலும் சிறு துண்டு என்றளவில் கணக்காக உட்கொள்வது நல்லது.

இதுதான் வாய்ப்பு என்று கரும்பின் இனிப்பு சுவைக்காக சிலர் சாறு எடுத்து குடிக்க விரும்புவார்கள். சர்க்கரை நோயாளிகள் அதனை கட்டாயம் செய்யக்கூடாது. அப்படி செய்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்திவிடும். சிறு துண்டு கரும்பினை கடித்து, மென்று அதன் சாறினை நிதானமாக விழுங்கி ருசிக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கான இந்த சிறப்பு பரிந்துரையில், வயிறு முட்ட பதார்த்தங்களை ருசித்துவிட்டு கரும்பையும் பதம் பார்ப்பது கூடாது. உணவை வெகுவாய் குறைத்த பிறகே கரும்பை ருசிக்கலாம் என்ற நிபந்தனையை மறந்து விடக் கூடாது.

கரும்பில் இருக்கும் பாலி ஃபினைல் ஆன்டி ஆக்ஸிடன்ட் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரப்புக்கும் உதவும். எனவே சிறு துண்டு கரும்பை கடித்து, மென்று அதன் சாறினை நிதானமாக உடலுக்கு வழங்கும்போது, கரும்பின் நற்பயன்கள் உடலில் சேரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in