சினைப்பை நீர்க்கட்டி போக்கும் இயற்கை மருத்துவம்!

இயற்கையோடு இயைந்து வாழ்வோம் -02
சினைப்பை நீர்க்கட்டி போக்கும் இயற்கை மருத்துவம்!

​​பல்வேறு மரபணு மற்றும் ஹார்மோன் கோளாறுகள் பெண்களின் ஆரோக்கியத்தையும் அதிகம் பாதிக்கிறது. பெண்களைப் பாதிக்கும் ஹார்மோன் சமநிலையின்மை தொடர்பான கோளாறு பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) ஆகும்.

15 - 44 வயதுக்குட்பட்ட பெண்களில் ஐந்தில் ஒருவர் இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பாதிப்புக்கு ஆளாகிறார். பெண் பருவமடைந்ததும் எப்போது வேண்டுமானாலும் இதன் தாக்கம் விளையலாம். இனப்பெருக்க ஹார்மோனில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக விளையும் இந்த பாதிப்பால், வளர்சிதை மாற்றம், கருவுறுதல் மற்றும் பெண்ணுக்கே உரிய தோற்றம் சார்ந்த பிரச்சனைகள் எழ வாய்ப்பாகிறது.

இந்த ஏற்றத்தாழ்வுகள் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்) அளவை மாற்றுகின்றன. இந்த நிலையில், சினைப்பையில் அளவில் சிறிய நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

அறிகுறிகள்:

ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாது போவது, கருத்தரிக்க இயலாமை, எதிர்பாராத எடை அதிகரிப்பு, மெலிந்து கொண்டிருக்கும் முடி, முகத்தில் அதிகப்படியான முகப்பரு மற்றும் சருமத்தில் எண்ணெய் மற்றும் கருமை திட்டு படர்வது, முகம், முதுகு, மார்பு போன்றவற்றில் முடி வளர்ச்சி, அடிக்கடி எழும் தலைவலி உள்ளிட்டவை பிசிஓஎஸ்-ன் அறிகுறிகளாக இருக்கலாம்.

இயற்கை மருத்துவம் :

1.வெந்தயம்:

நீர்க்கட்டியின் அளவைக் குறைக்கவும், பிசிஓஎஸ் பாதிப்புக்கு ஆளான பெண்களின் மாதவிடாய் சுழற்சியை எளிதாக்கவும் வெந்தயம் உதவும்.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் அல்லது 5 - 6 மணி நேரம் முன்பாக நீரில் ஊறவைத்து, ஒரு நாளில் இரண்டொரு முறை உட்கொள்ளலாம். ஊறவைத்த தண்ணீரையும் அருந்திவிடலாம். வெந்தயம் மட்டுமன்றி வெந்தயக்கீரை சமைத்து உண்பதும் உதவும். வெந்தயத்தின் உட்பொருட்கள் மாதவிடாய் தொடர்பான வலிக்கு நிவாரணியாகவும், மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும் உதவும்.

வெந்தயம்
வெந்தயம்

2. இலவங்கப்பட்டை மற்றும் தேன்:

கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை ஒரு கொதி கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து தினம் ஒருமுறை உட்கொள்ளலாம். இலவங்கப்பட்டை மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுவது ஆய்வின் அடிப்படையிலும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

3. ஆளி விதைகள்:

இந்த விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் நிறைந்துள்ளன. இவை சில பெண்களின் உடலில் எழும் ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆளி விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீருடன் விழுங்கலாம். இவற்றை காலை உணவுக்குப் பின்னர் 1 டீஸ்பூன் எடுத்துக்கொள்வது, பிசிஓஎஸ் பக்கவிளைவுகளில் ஒன்றான உடல் பருமன் குறைக்கவும் உதவும்.

பிரச்சினை தீர்க்கும் பயனுள்ள ஆசனங்கள்:

குறிப்பிட்ட ஆசனங்களை தொடர்ச்சியாக செய்வது பிசிஓஎஸ் பாதிப்புகளை குறைக்கும். பிரச்சினை உள்ளவர்கள் என்றில்லை; பிரச்சினை எழாது தடுக்கவும் இந்த ஆசனங்கள் உதவும். குறிப்பாக பெண்களின் இடுப்புத் தசைகளை வலுப்படுத்தும். ஹார்மோன் சுரப்புகளை சீர்படுத்தும்.

1. பத்ராசனம்: அடிவயிற்றில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மாதவிடாய் வலியை எளிதாக்கவும் உதவுகிறது.

2. மலாசபம்: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். பெருங்குடலின் செயல்பாட்டை மேம்படுத்தவும், கருத்தரிப்பை ஊக்குவிப்பதிலும் உதவுகிறது.

3. சர்வாங்காசனம்: கருப்பைக்கு நன்மை பயப்பதோடு, பிட்யூட்டரி மற்றும் தைராய்டு சுரப்பிகளின் சரியான செயல்பாட்டுக்கும் உதவும். இவற்றுக்கு அப்பால் ஹார்மோன் சுரப்புகளை சமன் செய்யவும் இந்த ஆசனம் உதவும்.

மேற்கண்ட ஆசனங்களுடன் கூடுதலாக 4. தித்திலி ஆசனம், 5.சக்தி பந்தாசனம், 6.புஜங்காசனம், 7. நாடி ஷோதன பிராணாயாமம், 8. பிராமரி பிராணாயாமம் உள்ளிட்ட ஆசனங்களை பழகுவதும் நல்லது.

சர்வாங்காசனம்
சர்வாங்காசனம்

இந்த ஆசனங்களின் ஒட்டுமொத்தமாய் பல்வேறு நன்மைகளை அளிக்கும். குறிப்பாக,

1. வயிற்று சுருக்கம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.

2. பிசிஓஎஸ் பாதிப்பு கண்டவர்கள் சதா எரிச்சல் உணர்வுடன் இருப்பார்கள். அவை தொடர்பாக எழும் மன அழுத்தத்தின்போது சுரக்கும் கார்டிசோலின் அளவைக் குறைக்க ஆசனங்கள் உதவும்.

3. பிசிஓஎஸ் சிகிச்சைக்கு உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். அதற்கு உதவும் வகையிலான இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் இந்த ஆசனங்கள் உதவும்.

4. மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும்.

5. ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஹார்மோனை பெண்களிடம் குறைக்க உதவும்.

6. மேலும் எடை குறைப்புக்கும் உதவுகிறது.

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in