கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாலை முதல் சோதனை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாலை முதல் சோதனை

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக 45 இடங்களில்  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று  அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 23-ம் தேதி அன்று கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த கார் ஒன்று  திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. அது குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று கருதிய தமிழக போலீஸார், துரிதமாக செயல்பட்டு அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி சோதனை செய்தனர். அதில்  அது கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு என்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து  துரிதமாக செயல்பட்ட தமிழக காவல்துறையினர்  அது தொடர்பான ஆறு நபர்களை  அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் தமிழகம் தாண்டியும் தொடர்புகள் இருக்கலாம் என்பதால் இந்த வழக்கை உடனடியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தமிழக காவல்துறையினர்  ஒப்படைத்தனர். அதனையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள் உடனடியாக இது தொடர்பாக பல்வேறு  இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மீண்டும் என்ஐஏ  அதிகாரிகள் தங்கள் சோதனையைத் துவக்கியுள்ளனர். கோவையில்  கோட்டைமேடு,  உக்கடம், பொன்விழா நகர்,  ரத்தினபுரி உட்பட மொத்தம்  20 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. நிஜாமுதீன் என்பவர் வீடு உட்பட  கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நபர்கள்,  தடை செய்யப்பட்ட இயக்கங்களின்  ஆதரவாளர்கள் என கருதப்படும் நபர்களின்  வீடுகளில் இந்த  சோதனைகள் நடைபெற்று வருகிறது.

கோவையைத் தவிர திருவள்ளூர், நாகை, சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் கேரளாவில் ஒரு இடத்திலும் மொத்தம் 45 இடங்களில்  இன்று அதிகாலை முதல் கொச்சின் மற்றும் சென்னையைச் சேர்ந்த தேசிய  புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னையில்  ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் தமிழக போலீஸாரும் தனியே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஓட்டேரியில் சலாவுதீன் என்பவர் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல  எம்கேபி நகரில் உள்ள ஜாபர் சாதிக் என்பவர் வீட்டிலும் போலீஸாரின் சோதனை நடைபெறுகிறது.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in