கள்ளக்குறிச்சி மாணவி சாவில் காவல்துறை விசாரணையில் குறைபாடு: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் பகீர் தகவல்

சக்தி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக்குழு.
சக்தி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக்குழு.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நடந்த விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகளும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவும் இருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு தலைவர் பிரியங் கானூங்கோ தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி கடந்த 13-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஏற்பட்ட கலவரம், நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவியின் மரணத்தை ஒட்டி, மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் கடந்த 23-ம் தேதியன்று பள்ளி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்திச் சென்றனர். அதனையடுத்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் இன்று விசாரணை நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இன்று சின்னசேலம் பகுதிக்கு வந்து பள்ளி மாணவி உயிரிழப்புக் குறித்து விசாரணை செய்தனர்.

அவர்கள் முதலில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூருக்குச் சென்று அங்குள்ள மாணவியின் பெற்றோரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து கனியாமூருக்கு வந்த அவர்கள் பள்ளி மற்றும் விடுதிக் கட்டிடம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்த்தித்த பிரியங் கானூங்கோ கூறுகையில், " உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து விசாரணை நடத்தினோம். அதன்பின் பள்ளியிலும், விடுதியிலும் ஆய்வு செய்தோம். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுள்ளோம். இச்சம்பவத்தை முதற்கட்டமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.

இதன்மூலம் பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி செயல்பட்டிருப்பதோடு, மாணவர்களுக்கு அடிப்படை வசதி குறைபாடுகளும் உள்ளதை குறிப்பெடுத்துள்ளோம். மாணவி உயிரிழப்புத் தொடர்பான விசாரணையில் முகாந்திரமாக சில குறைபாடுகளும், விசாரணை அதிகாரிகளின் கவனக்குறைவும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தங்கியிருந்த விடுதியில் கூடுதல் விசாரணை செய்ய உள்ளோம். இது தொடர்பான அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிப்போம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in