காட்டன் கார்ப்பரேசன் உருவாக்கப்பட வேண்டும்: தமிழக அரசை வலியுறுத்தும் பி.ஆர்.நடராஜன் எம்பி

  நடராஜன் எம் பி
நடராஜன் எம் பிகாட்டன் கார்ப்பரேசன் உருவாக்கப்பட வேண்டும்: தமிழக அரசை வலியுறுத்தும் பி.ஆர்.நடராஜன் எம்பி

``காட்டன் கார்ப்பரேசன் இந்தியா என்கிற அமைப்பை  ஒன்றிய அரசு வைத்திருப்பதைப்போல, காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என்ற அமைப்பு  உருவாக்கப்பட வேண்டும்'' என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 5 -ம் தேதி கோவை  சுகுணா ஆடிட்டோரியத்தில் தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில், தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கேரள தொழிற்துறை அமைச்சர் பி.ராஜிவ் மற்றும் தொழில்முனைவோர் அமைப்பினர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டின் நோக்கங்கள் குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மூத்த தொழில் முனைவோர் டி.பாலசுந்தரம் ஆகியோர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பி.ஆர்.நடராஜன் எம்பி கூறுகையில், ``ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களும், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழில் பாதுகாப்பு மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. 

இம்மாநாட்டில், மிக முக்கியமாக விவாதிக்கப்பட உள்ள அம்சங்களில், நூற்பாலைகளுக்கு தேவையான மூலப்பொருளான பஞ்சு விலை நிலையற்றதாக உள்ளது. இதனால், ஏற்றுமதிக்கான ஆர்டரை பெறுபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே, குறிப்பிட்ட 4 மாத காலத்திற்காவது, நிர்ணயிக்கும் விலைகள் நிலையானதாக, கட்டுக்குள் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். 

காட்டன் கார்ப்பரேசன் இந்தியா அமைப்பை ஒன்றிய அரசு வலுப்படுத்த வேண்டும். அதேபோல, தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விநியோகிப்பதைப்போல், பருத்தி அறுவடை காலத்தில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்து பற்றாக்குறை காலத்தில் விநியோகம் செய்ய வேண்டும். அதற்காக காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டும். 

ஒன்றிய அரசு பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். இதேபோல, வார்ப்படம், மோட்டார் பம்ப் போன்ற தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மேலும், குறு, சிறு தொழில்களுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அரசு தனி கவனம் மேற்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிற குறு, சிறு தொழில்களுக்கென தனி அமைச்சகம், தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். 

விசைத்தறி தொழில்களை பாதுகாக்க மானிய மின்சாரம் 1500 யூனிட்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in