1963-ல் மாயமான கண்டியூர் நடராஜர் சிலை; 2022-ல் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

நடராஜர் சிலை (மாதிரிப்படம்)
நடராஜர் சிலை (மாதிரிப்படம்)

தஞ்சாவூர் கண்டியூர் அருகே உள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து காணாமல் போன இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நடராஜர் சிலை அமெரிக்காவில் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்துள்ளது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்.

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர், திருவேதிகுடியில் உள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது திருநாவுக்கரசர், திருஞான சம்மபந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற 2000-ம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்த கோயில். இந்த திருக்கோயிலில் இருந்த நடராஜர் உலோகச்சிலை 1963-ம் ஆண்டில் காணாமல் போய் விட்டது. ஆனால் அது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டதாக ஆவணங்கள் ஏதும் இல்லை.

ஊரில் உள்ளவர்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர். ஆனால் தற்சமயம் வரை எந்தவிதமான புகாரும் செய்யப்பட வில்லையென தெரிந்தவுடன் ஊர்க்காரர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

சம்மந்தம் மகன் வெங்கடாசலம் சேதுராயர் (59) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், கும்பகோணம் சிலை திருட்டு தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் இந்திரா, உதவி ஆய்வாளர் சின்னதுரை, காவலர் ஜெகதீஸ் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் திருக்கோயிலில் இருந்த நடராஜர் சிலைக்கு பதிலாக வேறொரு சிலை வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் களவு போன சிலை அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள நியூயார்க் ஏசியா சொசைட்டி மியூசியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் புதுச்சேரியில் பெறப்பட்ட திருவேதிக்குடி நடராஜர் சிலையின் புகைப்படத்துடன் அமெரிக்காவில் இருக்கும் நடராஜர் சிலையின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றுதான் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நடராஜர் சிலையை யுனஸ்கோ ஒப்பந்தத்தின்படி மீட்டுக் கொண்டு வந்து வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஒப்படைக்க துரிதமான நடவடிக்கைகளை சிலை தடுப்பு பிரிவு போலீஸார் எடுத்து வருகின்றனர். மேலும் வேறு சிலைகள் எதுவும் அக்கோயிலில் களவு போயுள்ளதா எனவும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சிலையை கண்டுபிடித்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தங்கள் ஊர் கோயிலில் இருந்து களவு போன நடராஜர் சிலை 62 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது திருவேதிக்குடி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in