'நாங்களும் மனிதர்கள் தான், விலங்குகளை விட மோசமாக நடத்துகிறார்கள்’: மனு கொடுக்க வந்த நரிக்குறவ மக்களை தரையில் அமரவைத்த அதிகாரிகள்!

தரையில் அமர வைக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள்
தரையில் அமர வைக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நரிக்குறவர் இனமக்களை தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. தரை தளத்தில் மனு அளிக்க வரும் பொது மக்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பொது மக்கள் மனு அளிக்க காத்திருந்தனர்.

இந்நிலையில், தேவகோட்டை பகுதியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு அளித்த பட்டா நிலத்தை வேறு நபர்கள் ஆக்கிரமித்திருப்பதாகவும், அதனை அகற்றி தங்களுக்கே பட்டா வழங்க வேண்டும் என கூறியும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.

இச்சூழலில், அங்கிருந்த அதிகாரிகள் அவர்களை பொது மக்கள் இருக்கும் பகுதியை விட்டு வெளியே வந்து வரண்டா பகுதியில் அமர கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தரையில் அமர வைக்கப்பட்டனர்.

“நாங்களும் மனிதர்கள் தான். விலங்குகளை விட எங்களை மோசமாக நடத்துகிறார்கள்” என்று நரிக்குறவ பெண்மணி கண்கலங்கக் கூறினார். மனு அளிக்க வந்த நரிக்குறவர் இன மக்கள் தரையில் அமரவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in