
உலக அரங்கில் இந்தியாவின் நிலை மேம்பட, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைத்தாக வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தி அறைகூவல் விடுத்துள்ளார். இது இணையவெளியில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது.
அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா மற்றும் இந்தியர்கள் குறித்தான, ஒரு பாட்காஸ்ட் நிகழ்வில் பங்கேற்றபோது நாரயணமூர்த்தி இவ்வாறு பேசினார்.மேலும் இந்தியாவின் பணிக் கலாச்சாரம் என்பது அடியோடு மாறவேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதற்காக இளைஞர்கள் அதிகளவில் தங்கள் உழைப்பை நல்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
77 வயதாகும் நாராயணமூர்த்தி, பாட்காஸ்ட் நிகழ்வின் 'தி ரெக்கார்ட்' என்ற தலைப்பிலான விவாதத்தில், இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸிடம் உரையாடினார். அப்போது, வாரம் 70 மணி நேரம் வேலை என்பது ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இணையான வேலை நேரத்தை குறிக்கும் என்றார். தேசத்தை கட்டியெழுப்புதல், தொழில்நுட்பம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பல்வேறு தலைப்புகளில் இந்த பாட் காஸ்ட் நிகழ்வில் உரையாடல் தொடர்ந்தது.
"இந்தியாவின் வேலை உற்பத்தித் திறன் உலகிலேயே மிகக் குறைவாக இருக்கிறது. நமது வேலை உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரையில், நாட்டின் வளர்ச்சியில் நாம் எதிர்நோக்கும் மாற்றமானது நடைமுறையில் சாத்தியமாகப் போவதில்லை” என்றும் அவர் அப்போது தெரிவித்தார். நாராயணமூர்த்தியின் இந்த கூற்றுக்கு இணையவெளியில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
முன்னதாக வாராந்திர வேலை நேரம் குறைப்பு மற்றும் வார இறுதி விடுமுறை தினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தான விவாதங்கள் சூடுபிடித்திருந்தன. இதன் மூலம் கடின உழைப்பு என்பதற்கு மாற்றாக ஸ்மார்ட்டாக விரைந்து பணிகளை முடிக்கும் உத்திகள் வரவேற்பு பெற்று வந்தன. ஐரோப்பிய நாடுகளின் பெரு நிறுவனங்கள் சில பரிசோதனை அடிப்படையில் இவற்றை பின்பற்றியும் வருகின்றன. இந்த சூழலில் வாராந்திர பணி நேரத்தை 70 மணி நேரமாக உயர்த்தும் நாராயணமூர்த்தியின் யோசனை புதிய விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
’வாரம் 70 மணி நேரம் உழைப்பு என்பது உழைப்பு சுரண்டலுக்கு வித்திடும்; பணியின் துரிதம் மற்றும் துல்லியம் போன்றவை அடிபட்டுப்போகும்; கூடுதல் உழைப்புக்கு முதலாளிகள் கூடுதல் ஊதியம் வழங்க முன்வருவார்களா?’ என்றெல்லாம் இந்த விவாதங்கள் உப தலைப்புகளில் கிளைத்து வருகின்றன.