
நாமக்கல் அருகே கோழித் தீவன அரவை ஆலை வளாகத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் - மோகனூர் சாலையில் வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் கோழித்தீவன அரவை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக நாமக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் ஆலை வளாகத்தில் நேற்று போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா செடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் செடியைப் பிடுங்கி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த போலீஸார் இதுகுறித்து ஆலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதை தாங்கள் யாரும் வளர்க்கவில்லை என்று ஆலை நிர்வாகத்தினரும், தொழிலாளர்களும் மறுத்துவிட்ட நிலையில், ஆலைக்குள் கஞ்சா செடி வளர்ந்தது எப்படி என்று தெரியாமல் போலீஸார் குழம்பி வருகிறன்றனர். கோழித்தீவன ஆலையில் கஞ்சா செடி வளர்ந்திருந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.