31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையானார் நளினி: கணவர் முருகனுடன் செல்ல அனுமதி மறுப்பு!

31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையானார் நளினி: கணவர் முருகனுடன் செல்ல அனுமதி மறுப்பு!

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து 31 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் சிறையில் இருந்து நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலையானார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் அண்மையில் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, நளினி, சாந்தன் உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டதோடு, தமிழக ஆளுநர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர் நீதிபதிகள்.

இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று மாலை அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டனர். பரோலில் இருந்த நளினி, பரோலை ரத்து செய்யக்கோரி வேலூர் மத்திய சிறை நிர்வாகத்திடம் கடிதம் அளித்தார். இதையடுத்து நளினி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலையானார்கள். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதால் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 31 ஆண்டுகளுக்கு பிறகு வெளி உலகத்தை இவர்கள் காண இருக்கின்றனர்.

அதே நேரத்தில் நளினி விடுதலையானதும் தனது கணவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முருகனை திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார் என்று நளினிக்கு தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் முருகனை வேனில் ஏற்றி திருச்சிக்கு அழைத்து செல்ல இருந்தனர். அப்போது, வேனில் இருந்த கணவர் முருகனை நளினி சந்தித்து உருக்கமாக பேசினார். தனது கணவர் தன்னுடன் தங்க வேண்டும் என்று நளினி அப்போது வேண்டுகோள் வைத்ததாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in