
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசமிருக்கும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(நவ.11) உத்தரவிட்டது.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி நீதிமன்றத்தால் தண்டைனைக்குள்ளாகி சிறையிலிருக்கும் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழகத்தில் நீண்ட சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் தொடர்ந்து வந்தது. இவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காது இழுத்தடித்ததாக புகாரும் எழுந்தது. பின்னர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சட்டப் போராட்டங்களின் முடிவாக, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலைக்கு மே 18 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரறிவாளன் விடுதலையை முன்னிறுத்தி நளினி, ரவிச்சந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தையும் பின்னர் மேல்முறையீடாக உச்ச நீதிமன்றத்தையும் நாடினர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் ‘பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும்’ என்ற முடிவுக்கு வந்தது. முன்னதாக இடையீட்டு மனு மூலம் சாந்தன், ஹரிஹரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும், நளினி - ரவிச்சந்திரன் தொடுத்த மேல்முறையீட்டில் இணைந்து கொண்டனர்.
விசாரணை முடிந்த நிலையில், மனுதாரர்கள் 6 பேரின் விடுதலைக்கும் உத்தரவிட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.