அஸ்வின், ஜடேஜா மாயாஜாலம்; ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வி: நாக்பூர் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி

அஸ்வின்
அஸ்வின் அஸ்வின், ஜடேஜா மாயாஜாலம்; ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வி: நாக்பூர் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

இந்தியா– ஆஸ்திரேலியா இடையயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. ஒருகட்டத்தில் 240 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்த இந்திய அணி, பின்னர் கீழ் வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல முன்னிலை பெற்றது. ரோஹித் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 120 ரன்களில் ஆட்டமிழந்தார்.அதன் பிறகு ஜடேஜா – அக்சர் பட்டேல் இணை நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. ஜடேஜா 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அக்சேர் பட்டேல் – முகமது சமி இணை சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. சமி 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் அதிரடியாக ஆடி 38 ரன்களை சேர்த்தார். அக்ஸர் பட்டேலும் சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜடேஜா
ஜடேஜா

ஆஸ்திரேலிய அணி தரப்பில் டோட் முர்ஃபி 7 விக்கெட்களை வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ் 2, நேத்தன் லயன் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியைவிட இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றது. 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. உஸ்மன் குவாஜா, டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், முதல் இன்னிங்சை போல 2-வது இன்னிங்ஸிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அஸ்வின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் குவாஜா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மகிழ்ச்சியில் அஸ்வின்
மகிழ்ச்சியில் அஸ்வின்

அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 17 ரன் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான வார்னர் 10 ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த மெட் ரென்சா 2 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் கடைசி வரை ஆட்டமிக்காமல் 25 ரன்னில் இருந்தார்.

இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா, முகமது சமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் அஸ்வினும், ஜடேஜாவும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in