நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு மேஜர் உள்ளிட்ட 30 ராணுவ வீரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒரு மேஜர் உள்ளிட்ட 30 ராணுவ வீரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

நாகாலாந்தில், கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாகக் கருதி, 14 பேரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் 21 பாரா சிறப்புப் படையைச் சேர்ந்த மேஜர் உட்பட 30 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், மே 30-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் நாகாலாந்து போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

டிசம்பர் 4-ல் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஓட்டிங் அருகே கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், அங்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செய்தியறிந்து வெகுண்டெழுந்த உள்ளூர் மக்கள் ராணுவத்தினரைச் சுற்றிவளைத்துத் தாக்கியதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். அப்போது ராணுவத்தினர் தற்காப்புக்காக நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

வட கிழக்கு மாநிலங்களை அதிரச் செய்த இந்தச் சம்பவம் குறித்து ராணுவத்தைச் சேர்ந்த சிறப்புக் குழு விசாரணை நடத்திவரும் நிலையில், மாநில அளவில் இதை விசாரிக்க நாகாலாந்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 8 அதிகாரிகளைக் கொண்டிருந்த இந்தக் குழு 22 பேரைக் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. இதில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள். 7 அணிகளாகப் பிரிந்து இக்குழு விசாரணை நடத்திவந்தது.

இந்தச் சம்பவத்தில் 31 பேர் அடங்கிய படை ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக, திமாப்பூர் மாவட்டம் சுமுக்கேதிமா காவல் நிலைய வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாகாலாந்து காவல் துறைத் தலைவர் டி.ஜே.லோங்குமெர், “இந்தச் சம்பவம் தொடர்பாக நாகாலாந்து சிறப்பு விசாரணைக் குழு முழுமையாக விசாரணை நடத்தியிருக்கிறது. சம்பவம் நடந்தபோது 21 பாரா சிறப்புப் படையினர் எந்த விதிமுறையையும் பின்பற்றவில்லை என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் பொலேரோ வாகனத்தில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்” எனக் கூறினார்.

6 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதில், பாராசூட் வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, உள்ளூர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அக்குழுவின் மேஜர் உத்தரவு பிறப்பித்ததாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதில் மேலும் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பாக குவாஹாட்டி, ஹைதராபாத், சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள், தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட அறிவியல் ரீதியான கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மேஜர், 8 ஹவில்தார்கள், 9 பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நாகாலாந்து மாநில அரசின் விசாரணை மட்டுமல்லாமல், மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் விசாரணை நீதிமன்றத்தின் மூலம் ராணுவமும் பிரத்யேகமாக விசாரணை நடத்திவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in