‘கடும் பணிக்கு நடுவே இதுவும் தேவைதான்’ - காவலர்களின் ஜாலி வீடியோவைப் பகிர்ந்த அமைச்சர்!

‘கடும் பணிக்கு நடுவே இதுவும் தேவைதான்’ - காவலர்களின் ஜாலி வீடியோவைப் பகிர்ந்த அமைச்சர்!

கடும் பணிச்சுமைகளுக்கு நடுவே இளைப்பாறிக்கொள்வதும், புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலான கேளிக்கைகளில் ஈடுபடுவதும் எப்போதும் முக்கியம். குறிப்பாக, அன்றாடம் பணிச்சுமையை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அது இன்னும் அவசியம். அந்த வகையில், நாகாலாந்து மாநில போலீஸாரின் புத்துணர்வூட்டும் ஜாலி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதை அம்மாநில அமைச்சரே பகிர்ந்திருப்பதுதான் இன்னும் விசேஷம்!

1.47 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் ஒரு படிக்கட்டில் காவலர்கள் சில அமர்ந்திருக்கின்றனர். அதில் ஆண் போலீஸ், பெண் போலீஸ் என இருபாலரும் உள்ளனர். ஒருவர் பாலிவுட் பாடகர் கைலாஷ் கெரின் ‘சையா...’ பாடலைப் பாடத் தொடங்குகிறார். எனினும் அவருக்கே அது கேலியாகத் தெரிய அடக்க முடியாமல் சிரிக்கிறார். பின்னர் தாளைச் சுருட்டி தடி போல் வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் தலையில் செல்லமாகத் தட்டிக்கொள்கின்றனர். அதை ஒரு விளையாட்டாகவே மேற்கொள்கின்றனர். இவ்வாறாக, காவலர்கள் அனைவரும் கவலை மறந்து சிரித்தவாறு அமர்ந்திருக்கும் காட்சி இணையத்தில் பலரையும் கவர்ந்திருக்கிறது.

இந்த வீடியோவை நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங் ட்விட்டரில் பகிர்ந்ததுதான் இது வைரலானதற்கு முக்கியக் காரணம். ’வாழ்க்கை எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், ஒருவர் தொடர்ச்சியாகத் தன்னை உற்சாகமாகவும், துடிப்புடனும் வைத்துக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கில் ஸ்க்ரோல் செய்தபோது இந்த வீடியோவைப் பார்க்க முடிந்தது. நமது முன்களப் பணியாளர்கள் தங்கள் பணிகளுக்கு இடையே, இப்படி கேளிக்கை விளையாட்டில் ஈடுபடுவது ஊக்கம் தருகிறது’ என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

40,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கும் இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்துவருகின்றனர். ’உண்மையிலேயே உற்சாகம் அளிக்கும் வீடியோ இது’ என இணையவாசிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in