`எங்கள் பெண்களை இழிவுப்படுத்திய யூடியூப் சேனலை முடக்கவும்'- காவல் ஆணையரிடம் நாடார்கள் பேரமைப்பு புகார்

`எங்கள் பெண்களை இழிவுப்படுத்திய யூடியூப் சேனலை முடக்கவும்'- காவல் ஆணையரிடம் நாடார்கள் பேரமைப்பு புகார்

தனியார் யூடியூப் சேனலில் நாடார் இனப் பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய ஸ்ரீவித்யா என்ற பெண்ணை கைது செய்து, சம்மந்தப்பட்ட தனியார் யூடியூப் சேனலை முடக்கக் கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் சௌந்தர பாண்டியன் அமைப்பு நிர்வாகிகளுடன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாடார் இனப் பெண்கள் குறித்து யூடியூபில் இழிவாக பேசிய ஸ்ரீவித்யா என்ற பெண்ணை கைது செய்ய வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌந்தர பாண்டியன், "திரைப்பட ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து இழிவாக பேசியதை கண்டிக்கும் வகையில் தனியார் யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீவித்யா என்ற பெண், சம்மந்தமில்லாமல் நாடார் இனப் பெண்கள் குறித்து இழிவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. நாட்டின் சுதந்திரத்திலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் நாடார் இன மக்களின் பங்களிப்பு அளப்பரியது. கறுப்புக்கும் காவிக்குமான போட்டியில் நாடார் இனப் பெண்களை இழிவாகப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி தங்கள் இனப் பெண்களை இழிவாகப் பேசிய திராவிட நட்பு இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற பெண்ணை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் சம்மந்தப்பட்ட Mai Chennai 360 என்ற யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மீதும், தமிழக அரசு மீதும் நம்பிக்கை வைத்து புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நாடார் அமைப்புகள் ஒன்றுகூடி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in