'பெற்றோரை பார்த்துக் கொள்' என தம்பிக்கு வாட்ஸ் அப் செய்தி: மாயமான இளம் மருத்துவரால் பரபரப்பு

மருத்துவர் சூரஜ் கிருஷ்ணா
மருத்துவர் சூரஜ் கிருஷ்ணா'பெற்றோரை பார்த்துக் கொள்' என தம்பிக்கு வாட்ஸ் அப் செய்தி: மாயமான இளம் மருத்துவரால் பரபரப்பு

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த இளம் மருத்துவர், தனது தம்பிக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தலைமறைவான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தில்லை நகரைச் சேர்ந்தவர் சூரஜ் கிருஷ்ணா(29). மருத்துவரான இவர் கடந்த ஆறு மாதங்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி முதுகலை நீட் நுழைவு தேர்விற்குத் தயாராகி வந்துள்ளார்.

கடந்த 5-ம் தேதி நடந்த நீட் தேர்வை சூரஜ் எழுதிய நிலையில் நேற்று அதற்கான ரிசல்ட் வந்துள்ளது. மேலும் சூரஜ் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், பெற்றோரைப் பார்த்துக்கொள் என தனது தம்பிக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். உடனே அவரது தம்பி சூரஜை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் ஃபோனை எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது தம்பி, உடனே சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள சூரஜின் நண்பர் நடராஜனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடராஜன். சூரஜ் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் அங்கு இல்லை எனத்தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்னைக்கு விரைந்து வந்த அவரது பெற்றோர் காணாமல் போன மகன் சூரஜைக் கண்டுபிடித்துத் தருமாறு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சூரஜின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆன இடத்தை வைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் சூரஜ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எங்காவது சென்று விட்டாரா என்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த இளம் மருத்துவர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in