மாடுகளின் தலையை வெட்டும் மர்மக் கும்பல்: பின்னணி என்ன?

மாடுகளின் தலையை வெட்டும் மர்மக் கும்பல்: பின்னணி என்ன?

சிதம்பரம் அருகே இரவு நேரத்தில் மாடுகளின் தலையை வெட்டி வீசி எறிந்து செல்லும் மர்மக் கும்பலால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகேயுள்ள புது பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மனைவி இளவழகி என்பவரது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை காலையில் காணவில்லை. அதனால் கவலையடைந்த இளவழகி அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மாட்டைத் தேடி அலைந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வயலில் மாட்டுத்தலை தனியாகக் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளவழகி, இன்னும் கொஞ்ச தூரம் தேடிச்சென்றுள்ளார்.

அங்கே ஒரு இடத்தில் மாட்டின் குடல் பகுதி, தோல், வால் என சில பக்கங்கள் மற்றும் கிடந்துள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இளவழகி கூறுகையில், “கடந்த சில நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புது பூலாமேடு, சிவாயம் கிராமங்களில் இரவு நேரங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்கின்றன. மாடுகளின் இறைச்சிக்காக மர்ம நபர்கள் சிலர் இப்படிச் செய்கிறார்கள். மாடுகளின் தலைகளை வெட்டி வீசிவிட்டு, கறியை மட்டும் எடுத்துக்கொண்டு குடல், தோல் உள்ளிட்டவைகளை வயல்வெளிகளில் வீசி சென்று விடுகிறார்கள். மாட்டை அப்படியே ஓட்டிச் சென்றாலும் பரவாயில்லை. இப்படி அநியாயமாகக் வெட்டிக்கொன்று தலையை வீசிச் செல்வது வேதனை அளிக்கிறது. இதேபோல் இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் கூறினார்.

இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாட்டுத் தலையுடன் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in