
பெங்களூரு நகர மக்கள் மத்தியில், இரு தினங்களுக்கு முன்னர் வானில் தென்பட்ட திகில் அடையாளம் இன்னமும் பேசுபொருளாக நீடிக்கிறது.
இயற்கையின் பிரம்மாண்டமும், விநோதங்களும் மனிதனின் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது. அவற்றில் சிறிதும் பெரிதுமாய் ஏதேனும் ஒன்று மனிதர்களின் பார்வையில் இடறி அவர்களை நெகிழ்ச்சியடையச் செய்வதும் உண்டு. அப்படித்தான், பெங்களூரு ஹெப்பல் மேம்பாலத்திலிருந்து வானில் தென்பட்ட மாயத்தோற்றம் ஒன்று பெங்களூரு வாசிகள் மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
சற்றே பெரிய சாளரம் அல்லது கதவு வடிவத்தில் பலருக்கும் காட்சியளித்தது அந்த திகில் தோற்றம். மேகத் துணுக்குகளும், வெளிச்சப் புள்ளிகளும் சட்டகம் அமைத்த, இருள் பெட்டகத்தின் ஒரு பக்கத் தோற்றமாகவும் அது தென்பட்டது. காண்பவர்களின் முதல் பார்வைக்கு அச்ச ரேகைகளை விதைக்கும், இந்த தோற்றத்தை முன்வைத்து பலரும் சமூக ஊடகங்களில் பீதியை கிளப்பி விட்டனர்.
வானில் தென்படும் நரகத்தின் வாசல் மோசமான அறிகுறி என்றும், பெரிய பேய் ஒன்றின் சிறு பகுதி மட்டுமே நம் கண்களுக்குப் புலப்படுகிறது என்றும் சிலர் பயமுறுத்தினர். ஆன்மிக அன்பர்கள், இதோ ஏசு அழைக்கிறார் என்று பைபிளின் பக்கங்களில் இருந்து ஒப்பேற்றினார்கள். மனிதர்களை வரவேற்க காத்திருக்கும் ஏலியன்களின் சேட்டையாக இருக்கும் என்று வேறு சிலர் வதந்தி பரப்பினார்கள். இன்னும் சிலரோ... இது சொர்க்கத்தின் வாசல் தோன்றியது என்று சமூக வலைத்தளங்களில் வீடியோக்களைப் பரப்பினார்கள்.
இவர்களின் மத்தியில் அறிவியல் அடிப்படையில் சிந்திப்போர், உயரமான கட்டிடத்தை சூழ்ந்திருக்கும் வெளிச்சம் என்பது எங்கேயோ இரவு பார்ட்டி நடப்பதை குறிக்கிறது என்று விவரமாக விளக்கினர். தலைக்குப் பின்னே வெளிச்சம் அதிகரித்திருக்கையில், மேகத்துணுக்கும், வெளிச்சத்தை பிரதிபலிக்கும் நீர்த்துளிகளும் கலந்து இம்மாதிரி தோன்றும் என்று வேறு சிலர் விவாதித்தனர்.
எதற்கு சச்சரவு என விக்கிபீடியாவைச் சரணடைந்தவர்கள், ’புரோக்கன் ஸ்பெக்டர்’ என்ற பதத்தை அறிவியல் பூர்வமாக ஆதரமாக்கினர். அதிலும் திருப்தி அடையாதவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் இதே தோற்றம் தென்பட்டதாகவும், அதன் பிறகே சீனாவின் கரோனா உட்பட பல்வேறு சீரழிவுகள் தலைகாட்டியதாகவும், மேற்குலக பத்திரிகை செய்திகளை முன்வைத்து கொளுத்திப் போட்டார்கள். கடைசியாக பதிவானது பலரையும் பதற வைத்திருக்கிறது.