தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய மர்மப்படகு: போலீஸார் தீவிர விசாரணை

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மர்மப்படகு
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மர்மப்படகுதனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய மர்மப்படகு: போலீஸார் தீவிர விசாரணை

தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய மர்மப்படகு குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழக கடல் வழியாக இலங்கைக்கு சமையல் மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப்பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கடற்பகுதியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், கடல் அட்டைகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக்கட்டிகள், சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த காரில் எடுத்து வந்த கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 2 மாதத்திற்கு முன் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

தமிழகத்தின் இதர கடற்பகுதிகளில் இருந்து மர்மப்படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்திச் சென்று அங்கு வீடுகளில் பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் அந்நாட்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் கடத்தல் நடவடிக்கையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், தனுஷ்கோடி கடலில் மர்மப்படகு இன்று கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்தனர். ஆளில்லா அப்படகை கைப்பற்றினர். கடல் வழி கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுத்திய போது இன்ஜின் பழுதாகி கரை ஒதுங்கிய படகா? இலங்கையில் நேற்று கரையை கடந்த புயல் தாக்கத்தின் போது அங்குள்ள கடற்கரை பகுதிகளில் நிறுத்தியிருந்தபோது கரை ஒதுங்கிய படகா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

படகில் எழுதப்பட்டிருந்த பதிவெண் அடிப்படையில் இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபம் பகுதியைச் சேர்ந்த பைபர் படகு என தெரியவந்ததுள்ளது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in