எலும்பு முறிவு சிகிச்சைக்கு போன என் கணவரின் ஒரு கால் போச்சு: புத்தூர் கட்டு வைத்தியசாலை மீது இளம்பெண் புகார்

புத்தூர் கட்டு வைத்தியசாலை  சிவசாமி வேலுமணி.
புத்தூர் கட்டு வைத்தியசாலை சிவசாமி வேலுமணி.

தவறான சிகிச்சை அளித்ததால் தனது கணவர் காலை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக பிரபல புத்தூர் கட்டு வைத்தியசாலை மீது இளம்பெண் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பெயின்டர் விஜய்(28). இவருக்கு வேளாங்கன்னி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் விஜய் தனது குழந்தையை அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாட அழைத்து சென்றுள்ளார்.. அப்போது தவறி கீழே விழுந்ததில் விஜய்யின் வலது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே விஜயை அவரது மனைவி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கட்டு போட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. பின்னர் விஜய் தனது நண்பர் கூறியதன் பேரில் வடபழனியில் உள்ள பிரபல புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

புத்தூர் கட்டு வைத்தியசாலை.
புத்தூர் கட்டு வைத்தியசாலை.

அங்கு 4 கட்டுக்கள் போட்டால் சரியாகிவிடும் என வைத்தியசாலையில் தெரிவித்ததை நம்பி விஜய் பணம் கொடுத்து கட்டுப்போட்டு சென்றார். தொடர்ந்து காலில் ரத்தம் கசிந்ததால் விஜய் இரண்டாவது கட்டுப் போடச் சென்ற போது இது குறித்து வைத்தியசாலை உரிமையாளர் சிவசாமி வேலுமணியிடம் கேட்டுள்ளார். அவர் உடனே அட்மிட்டாக வேண்டும் என கூறியதால் அங்கு விஜய் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. ஒரு மாதமாகியும் கால் எலும்பு முறிவு சரியாகாததால் சந்தேகமடைந்த விஜய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அங்கு மருத்துவர்கள் விஜய் காலை பரிசோதித்து கால் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால் உடனடியாக காலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்து போன விஜய்யின் மனைவி வேளாங்கன்னி வேறு வழியில்லாமல் மருத்துவர்கள் கூறியது போல் கணவரின் காலை அகற்ற சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய்யின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது.

கால் இழந்த விஜய் மனைவி, குழந்தையுடன்.
கால் இழந்த விஜய் மனைவி, குழந்தையுடன்.

இந்நிலையில் புத்தூர்கட்டு வைத்தியச்சாலை அளித்த தவறான சிகிச்சையால் தான், தனது கணவர் விஜய் கால் பறிபோனதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வேளாங்கன்னி இன்று புகார் அளித்தார். இதன் பின் அவர் கூறுகையில், " தவறான சிகிச்சை அளித்த வைத்தியசாலை உரிமையாளர் சிவசாமி வேலுமணி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீருடன் கூறினார். ஏற்கெனவே தவறான சிகிச்சை அளித்ததாக சிவசாமி வேலுமணி மீது வடபழனி காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் வந்துள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in