
கொரோனா பரவல் அச்சப்படும் வகையில் இல்லை என்றாலும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முதற்கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மற்றும் சுகாதாரப் பேரவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவர் பேசுகையில், ‘’ கொரோனா பரவல் அதிகளவில் இல்லை ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதனால் அச்சப்பட வேண்டிய தேவையில்லை இருந்தபோதிலும் வழிகாட்டுதல் நாம் பின்பற்ற வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அனைத்திலும் நோயாளிகள், உடன் வருபவர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை நாளை முதல் அமல்படுத்த உள்ளோம்.
பெரிய அளவில் அச்சப்பட வேண்டிய தேவை இல்லையென்றாலும், அரசு மருத்துவமனைகளின் மூலம் தான் கொரோனா பரவல் அதிகரிக்கிறது என்பதால் இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஆக்சிஜன், தீவிர சிகிச்சைப் பிரிவு என்றெல்லாம் இல்லை ஆனால், 8 நாட்களுக்கு மேலாகத் தொண்டை வலி, காய்ச்சல், இருமல் என ஒரு பாடுபடுத்தி விடுகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் கூட நேற்று 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய நாம் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லா மருத்துவமனைகளில் விளம்பரப் பலகைகள் வைத்து கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் ‘’ என்றார்