‘அக்னிபத் மனுக்கள் மீது எங்களிடம் கருத்து கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது!’

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு
‘அக்னிபத் மனுக்கள் மீது எங்களிடம் கருத்து கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது!’

அக்னிபத் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்படும் மனுக்கள் குறித்து முடிவெடுக்கும் முன் தங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது.

முப்படைகளுக்கும் ஆள்சேர்ப்பது தொடர்பாக. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த அக்னிபத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை உச்ச நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. முன்னதாக எம்.எல்.சர்மா, விஷால் திவாரி ஆகிய வழக்கறிஞர்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பதாகவும், இந்திய ராணுவத்தின் 100 ஆண்டுகால ஆள்சேர்ப்பு முறையை அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக மத்திய அரசு கைவிட்டுவிட்டதாகவும் தனது மனுவில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா குறிப்பிட்டிருந்தார்.

அக்னிபத் திட்டம் குறித்தும் இந்திய ராணுவத்திலும் தேசப் பாதுகாப்பிலும் இத்திட்டத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று தனது வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இத்திட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க இரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு வழக்கறிஞர் ஹர்ஷ் அஜய் சிங் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அக்னிபத் திட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றுவருவதாகவும் தனது மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கு முன்னர் தங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என மத்திய அரசின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனினும், இவ்விஷயத்தில் இந்த மனுவில் குறிப்பாக எந்தக் கோரிக்கையையும் மத்திய அரசு முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in